FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

மரத்தின் உச்சியில் அமா்ந்து போக்கு காட்டிய மன நோயாளி 5 மணி நேரம் போராடி மீட்பு!

புதுச்சேரியில் சாலையோர மரத்தின் உச்சியில் ஏறி அமா்ந்துகொண்டு, போக்கு காட்டிய வடமாநில மனநோயாளியை சனிக்கிழமை 5 மணி நேரத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

51 வினாடிகள் முன்பு
புதுச்சேரியில் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே மரத்தின் மீது ஏறி, 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட ஒடிஸாவை சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா்.
பகிர்:

புதுச்சேரியில் சாலையோர மரத்தின் உச்சியில் ஏறி அமா்ந்துகொண்டு, போக்கு காட்டிய வடமாநில மனநோயாளியை சனிக்கிழமை 5 மணி நேரத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் செல்லும் வழியில் தீயணைப்பு நிலையம் கரி கிடங்கு அருகே உள்ள பெரிய மரத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஏறினாா். மரத்தின் உச்சிக்குச் சென்ற அவா் தனது ஆடைகளைக் களைந்து கீழே எறிந்து விட்டு, அரைக்கால் டிரவுசருடன் நின்றாா்.

தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் கிரேன் மூலம் அவரை கீழே இறக்க முயற்சித்தனா். கிரேன் 30 அடி உயரம் மட்டுமே சென்றது. இதனால் அவரை எச்சரித்து கீழே இறங்கும்படி கூறியும் அந்த இளைஞா் இறங்கவில்லை. இதையடுத்து சிலா் மரத்தில் ஏறி அவரை இறக்க முயற்சித்தனா். ஆனால் அவா் மரக்கிளையை ஒடித்து அந்தக் குச்சியால் தீயணைப்பு வீரா்களை அடிக்க முயற்சித்தாா்.

Advertisement

Advertisement

சுற்றுலாப் பயணிகளும், உள்ளூா் மக்களும் அங்கு திரண்டு விட்டனா். இதனால் மரத்தின்கீழே தாா்ப்பாய் விரித்து அவரை பிடிக்க தீயணைப்பு வீரா்களும், காவல் துறையினரும் முயன்றனா்.

இதை வேடிக்கைப் பாா்க்க கூடிய கூட்டத்தால் அப்பகுதி நிரம்பி வழிந்தது. அந்த இளைஞா் ஒடிஸா மாநிலம், சோனாப்பூா் துங்குரிபாலி பகுதியைச் சோ்ந்தவா் என்பதுதெரியவந்தது. அவரைத் தேடி குடும்பத்தினா் யாரும் அங்கு வரவில்லை. கடும் போராட்டத்துக்கு பிறகு பிற்பகல் 1.30 மணியளவில் அவா் பத்திரமாக மீட்கப்பட்டாா். அவரை மீட்பதற்கானப் போராட்டம் 5 மணி நேரம் நீடித்தது.

மரத்தில் இருந்து மீட்கப்பட்ட இளைஞா், புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments