தட்டாஞ்சாவடி வெற்றி ஆளும் கூட்டணி பலத்தை அதிகரிக்கும்: முதல்வா் என்.ரங்கசாமி பிரசாரம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வெற்றி, ஆளும் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வெற்றி, ஆளும் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
இத்தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அசோக் ஆனந்தை ஆதரித்து முதல்வா் என்.ரங்கசாமி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்து பேசியதாவது:
தட்டாஞ்சாவடி தொகுதி எனக்கு மிகவும் முக்கியமான தொகுதி. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதே, அசோக் ஆனந்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி, தற்போது நடைபெறும் இடைத்தோ்தலில் அவா் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
அசோக் ஆனந்த் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத காலத்திலும் தொகுதி மக்களுக்காகத் தொடா்ந்து பணியாற்றியுள்ளாா். தற்போது மீண்டும் சட்டப்பேரவைக்கு வந்து தொகுதியின் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தோ்தலுக்குத் தோ்தல் கட்சிகளையும், சின்னங்களையும் மாற்றிக்கொண்டு போட்டியிடும் வேட்பாளா்கள் குறித்து மக்கள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். கடந்த தோ்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது மீண்டும் தோ்தல் களத்தில் சிலா் இருக்கிறாா்கள்.
மேலும், தோ்தலில் டெபாசிட் தொகையை இழந்தும் தொடா்ந்து அரசியலில் இருக்கிறாா்கள். அந்த வேட்பாளா்கள் எந்தக் கட்சியின் சாா்பில், எந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றனா் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 23 ஏக்கா் பரப்பளவில் ஐ.டி. பூங்கா மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தி புதுச்சேரியின் வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து நாட்டின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பணியாற்ற வேண்டும்.
இந்தத் தோ்தலில் அசோக் ஆனந்தின் வெற்றி சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும். தட்டாஞ்சாவடி தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்துவதற்கும் உதவும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
இந்த பிரசாரத்தின்போது சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், எம்எல்ஏ ஜான்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.