கூட்டுறவு வங்கி கொள்ளை சம்பவம்: நகைகள் திரும்பக் கிடைக்காததால் விவசாயிகள் அவதி
உளுந்தூர்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் 1,790 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 8 ஆண்டுகளாகியும்
உளுந்தூர்பேட்டை அருகே கூட்டுறவு வங்கியில் 1,790 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 8 ஆண்டுகளாகியும் அடமானம் வைத்த நகைகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் நூதன முறையில் நகைகள் திருட்டுபோயின.
அதே பகுதியைச் சேர்ந்த இருவர் திட்டமிட்டு, வங்கி பூட்டு சாவியை பயன்படுத்தி உள்ளே சென்று நகைகளை திருடிச் சென்றிருந்தனர். இதில், 500 விவசாயிகள் வரை நகைக் கடனுக்காக அடமானம் வைத்திருந்த 1,790 பவுன் நகைகள் திருட்டுபோயின. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவக்குமார் உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், வணிக குற்றப்புலனாய்வு போலீஸாரும் விசாரணை நடத்தினர். இதில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் நகைகளை பறிகொடுத்த விவசாயிகளுக்கு நகைகள் திரும்ப வழங்கப்படாமல் நீண்டகாலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ.வி.ஸ்டாலின்மணி தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: திருநாவலூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 497 விவசாயிகள், பயிர் கடன் பெறுவதற்காக அடகு வைத்த 1,790 பவுன் நகைகள் கடந்த 22.5.2010 அன்று கொள்ளையடிக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் சிலரின் துணையுடன் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்று 9 ஆண்டுகள் கடந்த பிறகும் விவசாயிகள் அடகு வைத்த நகைகள் வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீஸார் குறிப்பிட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், சம்பந்தப்படவர்களின் சொத்துக்களையும் கைப்பற்றியுள்ளனர். இருந்தபோதும், அடகு வைத்த நகைகளை விவசாயிகளுக்கு வழங்காமல் வங்கி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி வழக்குகளை காரணம் காட்டாமல், உரிய நகைகளை மீட்டு வழங்குவதற்கு கூட்டுறவுத் துறையினரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.