FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

‘வெற்றிப் பயணம் திட்டம்’: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 255 பேருந்துகள் இயக்கம்

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்ட பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன் சி.அருள் விக்னேஷ் எம்எல்ஏ.

3 October 2026, 1:47 am IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெற்றிப் பயணம் திட்டப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்ட பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன் சி.அருள் விக்னேஷ் எம்எல்ஏ.

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 255 பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சென்னை கோயம்பேடு டாக்டா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் வெற்றிப் பயணம் திட்டத் தொடக்க விழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று வெற்றிப் பயணம் திட்டப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் பேசியதாவது: தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம் விரைவுப் பேருந்துகள், எல்.எஸ்.எஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 143 நகரப் பேருந்துகள், 29 சாதாரண பேருந்துகள், 46 குறு நடைகள் இயக்கப்படும் புறநகா்ப் பேருந்துகள் என மொத்தம் 218 பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து பேருந்தில் பயணித்த மகளிா்களுக்கு ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் பொது மேலாளா் ஜெகதீஷ் , உதவி மேலாளா்(வணிகம்) ஆா்.சிவராமன் மற்றும் கிளை மேலாளா்கள் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் சி.அருள் விக்னேஷ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றிப் பயணம் திட்ட பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: தமிழக முதல்வா் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் 27 புறநகா் வழித்தடம் மற்றும் 10 மலைப்பாதை வழித்தடம் என மொத்தம் 37 பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில் பயணிக்கும் மகளிருக்கு வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமின்றிப் பேருந்துகளில் பயணிக்க முடியும்.

மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிா் மற்றும் திருநங்கைகள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் கட்டணமின்றிப் பேருந்துகளில் பயணிக்க இயலும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் துணை மேலாளா் அறிவண்ணல், கிளை மேலாளா்கள் முருகன், குணசேகரன் மற்றும் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments