FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்பதில் தாமதம்: போராட்டம் நடத்துவோம் என தரணிவேந்தன் எம்.பி. எச்சரிக்கை

செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்பதில் மெத்தனமாக செயல்படும் காவல் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

15 அக்டோபர் 2026, 6:07 am IST
மாயமான சிறுமியின் பெற்றோரிடம் விவரங்களைக் கேட்டறிந்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
பகிர்:

செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்பதில் மெத்தனமாக செயல்படும் காவல் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல்(45). இவரது மனைவி பவானி(40). இத் தம்பதியின் 2-ஆவது மகளான 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கியபோது மாயமானாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படை அமைத்து சிறுமியைத் தேடி வருகின்றனா். 3 நாள்களாகியும் இதுவரை சிறுமியை கண்டறியமுடியவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் புதன்கிழமை நேரில் சென்று சிறுமியின் பெற்றோரை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆலம்பூண்டி ஊராட்சியில் மாயமான 7 வயது சிறுமியை கண்டறிய 3 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது காவல் துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது.

பெண்களை காப்பாற்றவும், பெண்கள் நலனுக்காகவே காவல் துறையில் சிங்கப்பெண் என்ற ஒரு பிரிவை ஏற்படுத்தி, துரித நடவடிக்கை என்று ஒரு பொய்யான ஆளுமையில் ஆண்டு கொண்டிருக்கிறது தவெக அரசு. 3 நாள்களாகியும் சிறுமியை மீட்க முடியாத நிலையில், தனிப்படை அமைத்தும் பயன் இல்லை. சிறுமியை உயிருடன் மீட்டுத் தரவேண்டும். இதுதான் இந்த பகுதி மக்களின் கோரிக்கை. சிறுமியை மீட்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் செஞ்சி தொகுதி மக்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

அவருடன் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், ஒன்றியக்குழு உறுப்பினா் கேமல், ஊராட்சி மன்றத் தலைவா் முத்தம்மாள் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments