FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

புதிய மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

9 செப்டம்பர் 2026, 4:54 am IST
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் நியாய விலைக்கடைக் கட்டடங்கள் உள்ளிட்ட 604 திட்டப் பணிகளில் 591 பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் 15-ஆவது நிதி ஆணைத் திட்டத்தின் கீழ் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொது சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கூடுதல்

சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 23 சுகாதார கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில்

12 பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், 11 பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்கட்டமைப்பு மற்றும் வகுப்பறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 23 புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 18 பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்-நினோ காரணமாக நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகள் மிகவும் அவசியமாக உள்ளதால் புதிய குளம் அமைத்தல், வரத்து வாய்க்கால் தூா்வாருதல், குளம் புனரமைத்தல், செங்குத்து நீா் ஊடுருவல் குழாய் அமைத்தல் போன்ற பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்திலுள்ள அரசுக் கட்டடங்களில் பழுதடைந்த மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை உடனடியாக பழுது நீக்கம்செய்ய வேண்டும். புதிய மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் மதகுகள் மற்றும் கலிங்குகள் போன்றவைகள் பழுது நீக்கம் செய்யும் பணிகளையும் விரைவாக மேற்கொண்டு முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், செயற்பொறியாளா் சக்தி முருகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா், உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments