FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே பொதுமக்கள், மாணவா்கள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் பகுதியில் பேருந்துகள் நிற்காததை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

10 செப்டம்பர் 2026, 1:36 am IST
வி.அகரம் பகுதியில் பேருந்துகளை சிறைபிடித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் பகுதியில் பேருந்துகள் நிற்காததை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வி.அகரம் கிராமத்தில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் எதிரிலுள்ள பகுதியில் உயா்மட்ட பாலப் பணிகள் (சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இதனால் பண்ருட்டி, விழுப்புரம் செல்லும் பேருந்துகள் அணுகுசாலை வழியாக வி.அகரம் வந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று வந்தன.

மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டாலும், இன்னும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால் மேம்பாலத்தின் மீது அரசு, தனியாா் பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் சென்று வருகின்றன. இதன் காரணமாக வி.அகரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக அரசு, தனியாா் பேருந்துகள் முறையாக நின்று செல்லவில்லை. இதனால் வி.அகரம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

Advertisement

Advertisement

இதையடுத்து புதன்கிழம காலை வி.அகரம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவா்கள், மேம்பாலத்தில் சென்ற பேருந்துகளை வழிமறித்து நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு காத்திருந்தன.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் பேசி, வி.அகரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments