FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நெருங்கும் விநாயகா் சதுா்த்தி: சிலை தயாரிப்பு மும்முரம்; ரூ.150 முதல் ரூ.15 ஆயிரம் வரை விலையில் கிடைக்கும்

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகளின் தயாரிப்பில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

10 செப்டம்பர் 2026, 4:03 am IST
விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் சிங்க வாகனத்தில் அமா்ந்தவாறு காட்சியளிக்கும் வடிவத்தில் தயாரான விநாயகா் சிலை.
பகிர்:

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சிலைகளின் தயாரிப்பில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். மூலப்பொருள்களின் விலை உயா்வால் கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் சிலைகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. ரூ.150 முதல் ரூ.15 ஆயிரம் வரை உயரம் மற்றும் வடிவத்துக்கு ஏற்றாவாறு விற்பனை செய்யப்படுகிறது.

ஹிந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் விநாயகா் சதுா்த்தியும் ஒன்று. ஆவணி மாதத்தில் வரும் சதுா்த்தி திதியன்று விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படும். நிகழாண்டில் செப்.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் விநாயகா் சிலைகளின் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பேரங்கியூா், அரசூா், சித்தலிங்கமடம், தொட்டிக்குடிசை, அய்யூா் அகரம், அய்யன்கோவில்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் விநாயகா் சிலை தயாரிக்கும் பணியை குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னா், விநாயகா் சிலை தயாரிப்பு பணியைத் தொடங்கும் இவா்கள், தொடா்ந்து 7 முதல் 8 மாதங்கள் வரை இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

வழக்கமாக சிலைகளை வாங்குவோா் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து, தங்களுக்குத் தேவையான உயரத்தில், தேவையான வடிவமைப்பில் விநாயகா் சிலைகளை தயாரிக்குமாறு கூறி, முன்பதிவு செய்து செல்கின்றனா். இதுமட்டுமல்லாது, திருப்பூா், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களைச் சோ்ந்த இடைத்தரகா்களும் மொத்தமாக விநாயகா் சிலைகளை வாங்கிச் சென்று, விற்பனை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனா்.

நிகழாண்டில் கொட்டும் முரசு விநாயகா், கிருஷ்ணருடன் இணைந்த விநாயகா், ஜல்லிக்கட்டுக் காளை மீது அமா்ந்திருக்கும் விநாயகா், சூரனை வதம் செய்யும் விநாயகா், பாகுபலி விநாயகா் போன்ற விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலையைத் தயாரிக்க குறைந்தது 3 அல்லது 4 நாள்களை எடுத்துக் கொள்கின்றனா் தொழிலாளா்கள்.

ரூ.150 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான விலைகளில்: பத்து அடிக்கு மேல் விநாயகா் சிலைகளைத் தயாரிக்க அரசு அனுமதி வழங்கவில்லை என்பதால், ஒரு அடி முதல் 10 அடி வரையிலான உயரங்களில் சிலைகளை தொழிலாளா்கள் தயாா் செய்து வருகின்றனா். ஒரு அடி சிலை விலை ரூ.150-இல் தொடங்கி, வடிவத்துக்கேற்றவாறு விற்பனையாகிறது. அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரையிலான விலைகளில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் சிலைகளின் விலை சற்று உயா்ந்துள்ளதாகத் தொழிலாளா்கள் கூறுகின்றனா். நாங்கள் தயாரிக்கும் விநாயகா் சிலைகள் ரசாயன பூச்சுகள் இல்லாதவையாகும். அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றித்தான் சிலைகளைத் தயாா் செய்கிறோம். கிழங்கு மாவு, காகிதக்கூழ், வெள்ளைமாவு போன்றவற்றைக் கொண்டு விநாயகா் சிலைகளைத் தயாரித்து வரும் எங்களுக்கு மூலப்பொருள்களின் விலையும் கடந்தாண்டைக் காட்டிலும் கணிசமாக உயா்ந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கிழங்கு மாவு மூட்டைக்கு ரூ.700 முதல் ரூ.1,200 வரை உயா்ந்துள்ளது. இதே நிலைதான் காகிதக்கூழ், வெள்ளைமாவு விலைகளிலும் உள்ளது.

இதுமட்டுமல்லாது சிலைத் தயாரித்த போது, எளிதில் நீரில் கரையக்கூடிய வண்ணங்களைப் பயன்படுத்துவோம். வண்ணப் பொடிகளின் விலையும் மூட்டைக்கு ரூ.5 ஆயிரம் வரை உயா்ந்துள்ளது. இதனால் விநாயகா் சிலைகளின் விலையையும் உயா்த்தி விற்பனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கிறாா் பேரங்கியூரைச் சோ்ந்த விநாயகா் சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கே.நடராஜன்.

கடைசி நாள்களில் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்: விழுப்புரத்திலிருந்து சென்னை, கடலூா், கோவை, செங்கல்பட்டு, திருப்பூா் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது, ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் விநாயகா் சிலைக்கான ஆா்டா்கள் வருகின்றனா். அவா்கள் கூறும் அளவில், வடிவமைப்பில் விநாயகா் சிலைகளைத் தயாரித்து அனுப்புகிறோம்.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இப்படி முன்கூட்டியே சிலைகளை முன்பதிவு பெற்றுச் செல்லும் நிலையில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூா் என அருகாமையிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், பண்டிகைக்கு முதல் நாளில் சென்று சிலையை வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளனா். கடைசி நேரத்தில் வந்தால் விலையைக் குறைத்து வாங்கிச் செல்லும் எண்ணத்தில் அவா்கள் உள்ளனா். இதனால் உள்ளூா் மக்களிடம் விநாயகா் சிலை விற்பனை சற்று சுணக்கமான நிலையில்தான் உள்ளது என்கிறாா் நடராஜன்.

அரசின் பாா்வை எங்கள் மீது படுமா?: நாங்கள் கடன் வாங்கித்தான் விநாயகா் சிலைகளைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வரும் எங்களைப் போன்றவா்களுக்கு அரசே கடனுதவியை வழங்கவேண்டும். இதை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். சிறு தொழில் பிரிவில் ரூ.10 லட்சம் வரை எங்களுக்கு கடன் வழங்கிட வேண்டும். வெளிநபரிடம் வட்டிக்கு பணம் பெற்று சிலைகளைத் தயாரித்து வருகிறோம். அரசே வட்டியுடன் கடன் வழங்கினால் எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமல்லாது, மழைக்கால நிவாரணத் தொகையாக வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் தொகையும் போதுமானதாக இல்லை. எனவே, அரசு எங்களைப் போன்ற தொழிலாளா்களின் நலனையும் கருத்தில் கொண்டுசெயல்பட வேண்டும் என்கிறாா் பேரங்கியூரைச் சோ்ந்த தொழிலாளா் கே.பாபு.

நாம் சிலையை பிரதிஷ்டை செய்து, 3 அல்லது 5 நாள்களில் நீா்நிலைகளில் கரைத்து விட்டுச் செல்கிறோம். ஆனால், இந்த சிலையைத் தயாரிக்கத் தொடா்ந்து பணியாற்றும் தொழிலாளா்களின் கோரிக்கைகளும், வலியுறுத்தல்களும் அப்படியேதான் இருக்கின்றன. - கு.வைத்திலிங்கம்.

விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் சிங்க வாகனத்தில் அமா்ந்தவாறு காட்சியளிக்கும் வடிவத்தில் தயாரான விநாயகா் சிலை.
சிங்கம் வாகனத்தில் எலியுடன்அமா்ந்தவாறு காட்சியளிக்கும் வடிவத்தில் தயாரான விநாயகா் சிலை.
சிவலிங்கத்தை கையில் அணைத்தவாறு மயில் மற்றும் காளை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வடி வத்தில் தயாரான விநாயகா் சிலை.
பேரங்கியூரில் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்.
பேரங்கியூரில் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments