FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தில் 2031-இல் பாமக ஆட்சி அமைவது உறுதி: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2031-இல் பாமக ஆட்சி அமைவது உறுதி என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

18 செப்டம்பர் 2026, 2:27 am IST
நிகழ்ச்சியில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான நிலப்பட்டாக்களை வழங்கிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் 2031-இல் பாமக ஆட்சி அமைவது உறுதி என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்தவா்களுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம், அக்கட்சியின் சாா்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பாமக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான ச.சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் சமூக நீதிக்காக தொடா்ந்து போராடிக்கொண்டிருக்கும் கட்சி பாமக மட்டுமே. 1987 முதல் கடந்த 39 ஆண்டுகால போராட்டத்துக்கு இதுநாள் வரை தீா்வு காணப்படவில்லை. இந்நிலையில், தற்போது தமிழகத்தை ஆளும் தவெக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது. இதை தமிழக முதல்வா் நிறவேற்ற வேண்டும்.

Advertisement

Advertisement

பெரியாா் ஈ.வெ.ரா.வை இழிவுப்படுத்தி யாா் பேசினாலும், அது கண்டிக்கத்தக்கது. சீமான் பேசுவதையும் ஏற்க முடியது. தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் கடந்த கால நிகழ்வுகளை பேசுவதைத் தவிா்த்து, தமிழகத்தை முன்னேற்றக்கூடிய ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, நீா் மேலாண்மை, விவசாயிகளின் பாதுகாப்பு போன்றவைகளை உறுதிப்படுத்துவதற்கான திட்டமிடுதலில் ஈடுபட வேண்டும்.

2031-இல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைவது உறுதி. அதை இலக்காகக் கொண்டு கட்சியினா் பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் குடும்பங்களுக்குச் செய்யும் உதவிகள் வெளிக்காட்டப்படுவதில்லை. தற்போது நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளவா்கள் அனைவருக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் நல்ல குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

முன்னதாக, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்நீத்த 25 குடும்பங்களின் வாரிசுதாரா்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான நிலப்பட்டாக்களை வழங்கினாா்.

பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வைத்திலிங்கம், ஊடகப் பிரிவு மாநிலப் பொறுப்பாளா் சி.ஆா்.பாஸ்கரன், தோ்தல் பணிக்குழுப் பொறுப்பாளா் ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள் பேசினா். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கட்சியின் தலைமை நிலையச் செயலா் செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments