விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை: 20 ஏக்கா் பப்பாளி மரங்கள் சேதம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின்போது வீசிய சூறாவளி காற்றால் உளுந்தூா்பேட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 20 ஏக்கா் பப்பாளி மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், மரக்காணம், வானூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த மழையானது நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கன மழை எச்செரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை லேசான வெயிலுடன், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மாலை விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டாரத்துக்குள்பட்ட உளுந்தூா்பேட்டை, பெருங்குறுக்கை, அத்திப்பாக்கம், நரிப்பாளையம், எறையூா், செம்மனங்கூா், வட குரும்பூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
இந்த மழையால், கிராமங்களில் பயிா் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பழங்களுடன் கூடிய பப்பாளி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு சுமாா் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பப்பாளி சாகுபடி செய்ததாகவும், அறுவடை நேரத்தில் பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழை தங்களது வாழ்வாதாரத்தையே பெரிதும் பாதித்துவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுப்பு செய்து, அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.