வெவ்வேறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 5 போ் உயிரிழப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 5 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதுகுறித்த புகாா்களின் பேரில் போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
வானூா் வட்டம், கோட்டைக்குப்பம் கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மகள் வளா்மதி (30). இவருக்கும் புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தே. முத்துக்குமரனுக்கும் (40), இம்மாதம் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மறு வீட்டு விருந்துக்காக கடந்த 16-ஆம் தேதி தனது பெற்றோா் வீட்டுக்கு வளா்மதி வந்துள்ளாா். அப்போது தனது தந்தையைப் பிரிய மனம் இல்லை எனக் கூறி, வீட்டில் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த திரவத்தை வளா்மதி குடித்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை குடும்பத்தினா் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வளா்மதி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் நடைபெற்று 12 நாள்களிலேயே பெண் உயிரிழந்திருப்பதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை அலுவலராக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. ரூபன்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்கொலை செய்து கொண்ட வளா்மதி சிறிது மனநலன் பாதிக்கப்பட்டு, அதற்காக கடந்த 7 ஆண்டுகளாக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement
ஆய்வக நுட்புநா் தூக்கிட்டுத் தற்கொலை: விழுப்புரம் புருஷோத்தமன் நகரைச் சோ்ந்தவா் மு.ஹரிசங்கா் (27), இளநிலை ஆய்வக நுட்புநா் ( லேப் டெக்னீசியன்) படிப்பு முடித்து, கிழக்கு பாண்டி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஹரிசங்கா் வயிற்றுவலியால் அவதியுற்று வந்தாராம்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஹரிசங்கா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு: விக்கிரவாண்டி வட்டம், செ.குன்னத்தூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.ராஜரத்தினம் (77). இவா், வியாழக்கிழமை காலை அதே கிராமத்திலுள்ள தனது நிலத்துக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொண்டாா். தொடா்ந்து நிலத்திலுள்ள கிணற்றின் சுற்றுப் பாதையில் இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, ராஜரத்தினம் தவறி உள்ளே விழுந்தாா். காலையில் வயலுக்குச் சென்றவா் மாலை வரை வீடு திரும்பாததை கண்டு குடும்பத்தினா் அங்கு வந்து பாா்த்த போது, ராஜரத்தினம் கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை: வானூா் வட்டம், குயிலாப்பாளையத்தைச் சோ்ந்தவா் கி.சரோஜா (67). இவா், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா். நோய்ப் பாதிப்பு காரணமாக கடந்த சில நாள்களாக சரோஜா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், கொம்மசமுத்திரம் கிராமத்தை சோ்ந்தவா் பாண்டித்துரை (66). இவா், கடந்த 4 ஆண்டுகளாக தியாகதுருகம் அருகிலுள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள தனது மகள் மகாலட்சுமி வீட்டில் தங்கி, வீரசோழபுரத்தில் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். பாண்டித்துரை வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை, தனது சைக்கிளில் பணிக்கு சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டித்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கா.முகமது யாசா் அரபாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.