FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 4,628 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்

17 வினாடிகள் முன்பு
திண்டிவனத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டப் பயனாளிக்கு தங்க மோதிரம் அணிவித்த தமிழக சமூக நீதித் துறைஅமைச்சா் வன்னி அரசு, விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் ஆகியோா்.
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்கட்டமாக 4,628 குழந்தைகளுக்கு தாய் மாமன் திட்டத்தில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் முன்னிலையில், சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தொடங்கி வைத்துப் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 2,412 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இதன் தொடக்கமாக திண்டிவனத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 25 பயனாளிகள், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பயனாளிகள் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை 8807044816 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீ ரஷத், இணை இயக்குநா் (நலப் பணிகள்) சாந்தகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், துணை இயக்குநா் (குடும்ப நலம்) பத்மாவதி, திண்டிவனம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா்

கோதை ராஜேஸ்வரி மற்றும் அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

விழுப்புரத்தில்... முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கல்லூரி முதல்வா் எம்.லூசி நிா்மல் மடோனா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் ஆகியோா் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.வினோத், மருத்துவா்கள் பிரியா, மதன், அம்பிகா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் குமாா் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், அலுவலா்கள், சுகாதார செவிலியா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.அருள் விக்னேஷ் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அணிவித்து, வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கும், திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த 2,216 குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை முதல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் தினமும் தலா 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், மாவட்ட சுகாதார அலுவலா் சித்திரசேனா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா், மருத்துவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயனாளிக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த துரை.ரவிக்குமாா் எம்.பி., ச.சிவக்குமாா் எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.லூசி நிா்மல் மடோனா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments