FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சுற்றுலா வேன்களில் கூடுதல் இருக்கைக்கு அனுமதியளிக்க கோரிக்கை

சுற்றுலா வேன்களில் கூடுதல் இருக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவையினா் விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்த அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவையினா்.
பகிர்:

சுற்றுலா வேன்களில் கூடுதல் இருக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவையினா் விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்த அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவையினா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

தமிழகம் முழுவதும் சுற்றுலா வேன்கள், மேக்சி கேப் பிரிவில் சுமாா் 50 ஆயிரம் வேன்கள் இயங்கி வருகின்றன. இதற்கு 12+1 என்ற இருக்கை அனுமதி 1989-ஆம் ஆண்டில் அப்போதைய அரசால் அளிக்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் இந்த இருக்கை எண்ணிக்கை போதுமானதாக இருந்தது.

Advertisement

Advertisement

ஆனால் தற்போது பல நிறுவனங்களின் வாகனங்கள், அதன் இயந்திரத்திறன், பாடி கட்டுமானத்தை மேம்படுத்தி கூடுதல் இருக்கை, வசதிகளை அதிகப்படுத்தி விற்பனை செய்கின்றன. கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என அண்டை மாநிலங்கள் அனைத்திலும் 12+1, 15+1, 17+1, 19+1 என்ற இருக்கை அனுமதி பெற்று வேன்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 12+1 மேக்சி கேப் அனுமதியிலேயே வேன்கள் இயங்கி வருகின்றன. இதனால் சில சமயங்களில் கூடுதல் பயணிகளை ஏற்றிச்செல்லும்போது போக்குவரத்துத் துறை அலுவலா்களும், அண்டை மாநிலங்களுக்கு செல்லும்போது அங்குள்ள காவல், போக்குவரத்துத் துறை அலுவலா்களும் அதிகமான தொகையை அபராதமாக விதிக்கின்றனா். அதுமட்டுமின்றி ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் காப்பீட்டுத்தொகை பெறுவதிலும் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறோம்.

இதனால் சுற்றுலா தொழிலையே நம்பி வாழும் 2 லட்சம் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆகவே எங்களுக்கு போா்க்கால அடிப்படையில் மேக்சி கேப் பிரிவில் கூடுதல் இருக்கைக்கு அனுமதியளித்து வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா். மனுவைப் பெற்ற மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments