முகப்பு
செய்திகள்

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... ரசிகைக்குப் பதிலளித்த விஜய்....

Updated On : 20 ஜூன் 2026, 9:54 am IST
1997-ல் விஜய்
பகிர்:

1997-ல் ரசிகையின் உணர்வுப்பூர்வமான கடிதத்திற்கு விஜய் அளித்த பதில்.

அன்புள்ள அண்ணன் விஜய் அவர்களுக்கு...

உங்கள் தங்கை ரேணுகா தேவியின் அன்பு மடல், உங்கள் நலத்தையும் அப்பா அம்மா அவர்களின் நலத்தையும் அறிய ஆவல். நான் போட்ட கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை. ஆனால், போட்டோ மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள். என் பாசம் புரியவில்லையா? நான் உங்கள் மேல் உயிரையே வைத்துள்ளேன். பாசத்தைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், செயல் மூலம் நிரூபித்து விடலாம். ஒரு சுண்டு விரலை வெட்டி அனுப்பினால்தான் உங்கள் தங்கையாக ஏற்றுக் கொள்வீர்களா...? நான் உங்களுக்காக எதையும் தரத் தயாராக உள்ளேன். என் உயிரைக்கூட தருவேன்.

Advertisement

Advertisement

நான் உங்களுக்கு கடிதம் எழுதும்போது கிடைக்கிற ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்கவில்லை. உங்களின் தங்கையாக எனக்கு தகுதி இல்லையா..? வசதிதான் இல்லை. ஆனால், மனதில் அன்பு மட்டும் அதிகமாக உள்ளது. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். கடவுள் நேராக வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று என்னிடம் கேட்டால் விஜய் அண்ணனின் அன்பு மட்டும் எனக்கு கிடைக்க வேண்டும். அது, ஏழேழு ஜென்மத்திற்கும் தொடர வேண்டும் என்று கேட்பேன். உடலை நன்றாக பார்த்தும் கொள்ளுங்கள். ஷூட்டிங் செல்லும்போது பார்த்துச் செல்லவும். கடலின் அலைகள் எப்போது நிற்கிறதோ அப்போதுதான் நமக்கு பிரிவு.

அன்பிற்கு விலை அன்புதான். அன்பு அழியாதது. என் அன்பை இந்தக் கடிதம் மூலம் எழுதுகிறேன். பின்பு இந்த ஏழையைத் தங்கையாக ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம். ஆனால் ஒன்று மட்டும் கூறி விடுகிறேன். நீங்கள் என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நான் உங்களை என் அண்ணனாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருப்பேன்.

இப்படிக்கு

உங்கள் தங்கை,

என். ரேணுகா தேவி,

விருதுநகர்.

-------------------------

பதில்

பாசமுள்ள தங்கை எஸ். ரேணுகா தேவிக்கு...

மடல் கண்டு மகிழ்ந்து உங்கள் அண்ணன் விஜய் எழுதுகிறேன். என் தந்தை தாய் மற்றும் என் குடும்பத்தினர் யாவரும் நலம். உங்கள் பாசத்தை நான் புரிந்துக் கொள்ளவில்லை என்று எழுதியிருந்தீர்கள். புரிந்து கொண்டேன்; ஆசையோடு உங்களை என் தங்கையாக ஏற்றுக் கொண்டேன். தொடர்ந்து படப்பிடிப்பு இருந்ததால் உங்களுக்கு கடிதம் எழுத முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். விரலை வெட்டி அனுப்பினால்தான் என்னை தங்கையாக ஏற்றுக் கொள்வீர்களா என்றும் என் மீது நீங்கள் உயிரையே வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தீர்கள்.

ஏதோ என் மீது அதிகமான வெறித்தனமான பாசம் கொண்ட ஒரு ரசிகர் அப்படி செய்துவிட்டார். நான் இதையெல்லாம் விரும்ப மாட்டேன். அந்த ரசிகரை என் வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு அதிகமாக அட்வைஸ் செய்து அனுப்பினேன். என் மீது அன்பு கொண்டவர்களும். என் ரசிகர்களும், ஏழை எளியோர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைப்பவன் நான். ஆகையால் நீங்கள் அப்படி செய்தால்தான் உங்களை என் தங்கையாக ஏற்றுக் கொள்வேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

நான் ஒரு நடிகன். இருந்தாலும் நானும் ஒரு அன்பான குடும்பத்தில் பிறந்தவன். எனக்கும் அன்பு, பாசம், காதல், வறுமை அனைத்தும் தெரியும். உங்கள் கடிதத்தில் அடங்கியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள பொருளை என்னால் உணர்ந்து பார்க்க முடிகிறது. உங்கள் பாசம் நிறைந்த கடிதத்தை படித்தபோதே உங்களை என் தங்கையாக ஏற்றுக் கொண்டேன். நம் அண்ணன் தங்கை உறவு ஏழேழு ஜென்மம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சம் உள்ள வரை தொடரும்.

கடல் அலைகள் ஓய்ந்தாலும் நம் பாச அலைகள் ஓயாது.

என் மீது பாசமுள்ள தங்கைகளில் நீங்களும் ஒருவர் என்பதை உறுதியோடும் உரிமையோடும் கூறுகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்புள்ள அண்ணன்,

விஜய்.

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிப். 1 1997 ஆம் ஆண்டு வெளியான கடிதம்.

Vijay's reply to an emotional letter from a female fan in 1997.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments