FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கட்டுரைகள்

தேர்தல் செலவு: அன்றும் இன்றும்

மக்கள் கலந்துகொண்டு ஜனநாயக முறையில் அரசமைப்பை உருவாக்கும் முறை 1937-இல்தான் முதல் முறையாக இந்தியாவுக்கு

Updated On : 16 செப்டம்பர் 2014, 5:05 am IST
பகிர்:

மக்கள் கலந்துகொண்டு ஜனநாயக முறையில் அரசமைப்பை உருவாக்கும் முறை 1937-இல்தான் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தது. 1935-இல் இந்திய சட்டத்தின் கீழ் அதுவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு கட்டுப்பட்ட முறையில் தில்லியில் மத்திய பேரவையும், மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையும் அப்போதிருந்த வைஸ்ராய், கவர்னர் ஆகிய அதிகாரிகளுக்கு கட்டுப்பட்ட நிலைமைதான் இருந்தது.

அதுவரை மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் எல்லா வகைகளிலும் ஏகாதிபத்திய அரசாங்கத்தை எதிர்த்தே போராடி வந்தது. அப்போதும் மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், சத்தியமூர்த்தி போன்றவர்கள் சுயராஜ்ய கட்சி என்ற முறையில் ஒருவகையான எதிர்க்கட்சியை வளர்த்து வந்தார்கள்.

1937-இல் முதல் முறையாக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு பேரவைக்குள்ளும் மக்களின் சார்பாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்பது என்று முடிவு செய்தது.

Advertisement

Advertisement

1934-இல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். 1935-இல் ஜவாஹர்லால் நேரு லக்னெü மாநாட்டில் காங்கிரஸின் தலைவராக ஆனார். ஆயினும் 1937-இல் வரப்போகும் தேர்தலை தாம் முன்னின்று நடத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு அவருக்கு வந்தது.

அதற்காக நேரு நேரடியாக மகாத்மா காந்தியை சந்தித்து தாம் எட்டு மாதங்கள்தான் காங்கிரஸ் தலைவராக இருப்பதாகவும் மேற்கொண்டு 1936-37-இல் தம்மையே காங்கிரஸ் தலைவராக ஆக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது காந்திஜி அதற்கு ஒப்புக் கொண்டார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே, 1936-37-இல் காங்கிரஸின் தலைவராக இருக்க வேண்டும் என்று சர்தார் வல்லபபாய் படேல் ஆதரவு திரட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நேரு இருக்க வேண்டும் என்று படேலை அழைத்து காந்தி கூறினார். அதற்கு படேலும் ஒப்புக் கொண்டார்.

1935-36-ஆம் ஆண்டுகளில் நேரு தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு நாள் அலாகாபாத் மாவட்டத்தில் நேருவுடன் லால் பகதூர் சாஸ்திரி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். கடைசியாக இரவு 8.30 மணிக்கு அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்தன.

உடனே தனது காரில் புறப்பட நேரு தயாரானார். கூட்டம் நடத்திய காங்கிரஸ்காரர்களும் விடைபெற்றுக் கொண்டனர். சிறிது தூரம் காரில் சென்றதும் லால் பகதூர் சாஸ்திரியைப் பார்த்து நேரு சொன்னார்: "நான் விடைபெற்றுக் கொள்கிறேன் என்றதும் காங்கிரஸார் சரி என்று கூறி விடைபெற்றனர். ஒரு கோப்பை தேநீர் கூட அளிக்கவில்லை. இப்போது எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எங்கேயாவது ஏதாவது சாப்பிடலாம் என்றார்.

லால் பகதூர் சாஸ்திரியும், அவருடன் வந்த பூர்ணிமா பானர்ஜியும் நேருவுடன் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்துக்குச் சென்றார்கள்.

மூவரும் சாப்பிட்டவுடன் பில் வந்தது. நேரு தனது சட்டைப் பையைப் பார்த்தார். அதில் ஒரு ரூபாய்தான் இருந்தது. சாஸ்திரியிடமும், பூர்ணிமாவிடமும் அதைவிடக் குறைவாக இருந்தது. மூவரும் தம்மிடம் இருந்ததைக் கொடுத்து செலவை ஈடுகட்டினார்களாம்.

இதை எஸ்.ஒய்.குரேஷி எழுதிய ஆங்கில நூலுக்கு முன்னுரை தந்த காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டுவிட்டு, "இந்த காலத்தில் ஒரு கட்சித் தலைவருக்கு அத்தகைய ஏழ்மையான சங்கடமான சூழ்நிலை நிச்சயமாக வராது. தற்காலத்தில் தேர்தலில் பணமழை கொட்டுகிறது. கோடிக்கணக்கில் பணம் கட்சித் தலைவர்களைத் தேடி வருகிறது' என்று குறிப்பிடுகிறார்.

ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தும் அமைப்பு (ஏ.டி.ஆர்.) நடத்திய ஆய்வின்படி, இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 2004-ல் 405-ஆக இருந்தது.

இதுவே, 2009-இல் 1,200-ஆகவும் 2014-இல் 2,191-ஆகவும் உயர்ந்துள்ளது. தேர்தலில் வென்ற கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2004-இல் 139; 2009-இல் 303; 2014-இல் 437.

இந்திரா காந்தி அகால மரணமடைந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் ராஜீவ் காந்தி 542 இடங்களை உடைய மக்களவையில் 415 இடங்களைப் பெற்றார்.

ஒரு கட்சி, ஒரு சின்னம், ஒரு தேர்தல் அறிக்கை என்ற அடிப்படையில் ஜெயபிரகாஷ் நாராயண் உருவாக்கிய ஜனதா கட்சி 1977-இல் 295 இடங்களில் வென்றது.

இப்போது 2014 தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடியின் பா.ஜ.க.வில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

தேர்தல் காலத்திலும் பிரதமராகப் பதவியேற்ற பிறகும் மோடி தந்துள்ள உறுதிமொழிகள் மிகவும் பரந்த அளவில் உயர்ந்துள்ளன.

அவை ஓரளவு நிறைவேறினால் அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments