FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

'டீப் ஸ்டேட்' களமிறங்கி இருக்கிறதா?

டீப் ஸ்டேட் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல், ஆழமாக வேரோடியிருக்கும் நிழல் அரசு என்று பொருள்.

Updated On : 29 ஜூலை 2026, 6:30 am IST
அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
பகிர்:

டீப் ஸ்டேட் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல், ஆழமாக வேரோடியிருக்கும் நிழல் அரசு என்று பொருள். நேரடியாக இந்த ஆங்கில வார்த்தையை தமிழில் மொழிமாற்றம் செய்தால் 'டீப்' என்றால் 'ஆழமாக ஊடுருவியுள்ள', ஸ்டேட் என்றால் அரசு என்றுதான் அர்த்தம் சொல்ல வேண்டும். அதுவல்ல டீப் ஸ்டேட்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது மக்கள் செல்வாக்கு பெற்ற நிலையான ஓர் அரசுக்கு எதிராக செயல்பட்டு, உளவு பார்ப்பதன் மூலம் சதி வேலைகளில் ஈடுபட்டு, உள்நாட்டில் செயற்கை புரட்சியை உருவாக்கி, அல்லது வெளியிலிருந்து போர் யுத்த ராணுவ நடவடிக்கைகளை உருவாக்கி தனக்கு சாதகமான ஆட்சி மாற்றங்களை செய்து கொள்வது, இதற்காக ஒரு குழுவாக செயல்படுவது என்பதுதான் டீப் ஸ்டேட்டின் செயல்பாடு.

வெளிநாட்டிலிருந்து அல்லது உள்நாட்டிலிருந்து ராணுவம், காவல் துறை, அரசு இயந்திரம் மற்றும் உளவுத் துறை, ஊடகத் துறை இவை மூலம், நிலையான மக்கள் நல அரசுக்கு எதிராக, அரசுக்கு ஈடாக, இணையாக ஒரு போட்டி அரசையே நடத்தி அந்த அரசைக் கவிழ்த்து தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கும் வல்லமை டீப் ஸ்டேட் குழுவினருக்கு உண்டு.

Advertisement

Advertisement

உலகளாவிய வகையில் பார்க்கிற போது துருக்கி, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், ஈரான், இராக், உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் 'டீப் ஸ்டேட்' நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன என்றுதான் கூறவேண்டும். டீப் ஸ்டேட் நடவடிக்கைகளை அமெரிக்கா தற்போது தனது சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. மற்றும் கிறிஸ்தவ என்.ஜி.ஓ. மூலம் நடத்துகிறது. இதே போல ரஷியா தனது கேஜிபி உளவு ஸ்தாபனம் மூலமும், சீனா தனது உளவு ஸ்தாபனங்கள் மூலமும் தங்களுக்கு போட்டியாக, எதிராக உள்ள நாடுகளுக்கு எதிராக டீப் ஸ்டேட் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது அமெரிக்க டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க டாலர் மதிப்பு, பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, உலகம் முழுவதும் விளைநிலங்கள், உணவு ஆகியவற்றை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது, இந்த மூன்று விஷயங்களில் அமெரிக்காவில் உள்ள சர்வ சக்தி வாய்ந்த வலிமையான தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்தி வரும் சில தனி நபர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நடத்தும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.

டீப் ஸ்டேட் குறித்து பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்து இதை நடத்துபவர்களின் மூலத்தை கண்டறிந்துள்ளார்கள். தற்போது அமெரிக்காவில் டக்ளஸ், ஜார்ஜ் சோரஸ் உள்ளிட்ட நபர்களும் ஹிண்டன் பர்க், பீஸ், ஹோப், கிரீன் போன்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தெற்காசிய பகுதிகளான எண்ணெய் வளமிக்க பெட்ரோல் கிணறுகள் நிரம்பிய அரபு நாடுகள், ஈரான், இராக், குவைத், அபுதாபி, ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தனது ஆதிக்கத்தை டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் பெட்ரோல் லாபி தேர்தல் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை எப்போதும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை இந்த பெட்ரோல் லாபி அரசியல் தீர்மானம் செய்கிறது.

உலகில் நாடுகளுக்கிடையே போர்கள் உருவாக வேண்டும், ஆயுதங்கள் விற்க வேண்டுமென்றால் போர்கள் நீடிக்க வேண்டும். அமைதி ஏற்பட்டுவிடக் கூடாது. டீப் ஸ்டேட் நடவடிக்கைகளில் போர்களை உருவாக்கி நடத்துவது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

உள்நாட்டுப் புரட்சிகள் மூலமாக ஆட்சி மாற்றங்கள் டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தப்படுகின்றன. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சி மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம், நேபாளத்தில் நடந்த போராட்டம் இவையெல்லாம் அமெரிக்க டீப் ஸ்டேட் நடவடிக்கைகளாகும்.

அப்போதைய அரசியல் சூழ்நிலையில் உலகம் முழுவதும் வல்லரசு நாடுகளான அமெரிக்க சார்பு நாடுகள், ரஷியா சார்பு நாடுகள் என்று இரண்டு பிரிவாக இருந்தது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்திரா ஏற்றுக்கொண்டு 'அணிசேரா நாடுகள் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும். டாலருக்கு மாற்றாக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்' என்ற கருத்தை முன் வைத்து செயல்பட தொடங்கினார். இந்தக் கருத்தை முன்வைத்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் ஆட்சிக் காலத்தில் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியின் தொடக்கம் ஏற்பட்டது. பஞ்சாப், அஸ்ஸôம், இலங்கை, பிரச்னைகளுக்கு தீர்வு காண ராஜீவ் முற்பட்டார். அவரும் படுகொலை செய்யப்பட்டார்.

அணு ஆயுத பரவல் ஒப்பந்தங்களில் இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா கையொப்பமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டங்கல், காட் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள் யாரிடம் நாம் பெட்ரோல் வாங்கி இறக்குமதி செய்ய வேண்டும், சர்வதேச அளவில் எந்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட வேண்டும் என்பதையெல்லாம் நமது நாட்டு அரசியல் தலைவர்களும் மக்களும் முடிவு செய்ததைவிட அமெரிக்காவின் சிஐஏ உளவு நிறுவனம் மற்றும் டீப் ஸ்டேட் நடவடிக்கைகளே முடிவு செய்தன. இது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள் என நாம் கருதலாம். ஆனால், தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளோம்.

பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு அமெரிக்க டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் இந்தியாவை குறிவைத்து நடைபெறுகின்றன. இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காக இந்தியாவில் ஊடுருவியுள்ள அமெரிக்கன் டீப் ஸ்டேட் நடவடிக்கைகள் வெகு தீவிரமாக நடைபெற்றும்கூட நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது தலைமையிலான அரசையும் டீப் ஸ்டேட் குறிவைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. மோடியின் ஆட்சியில் உலகில் எந்த நாட்டையும் சார்ந்து இருக்காமல், இந்தியாவின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரஷியா, உக்ரைன் போர் காரணமாக ரஷியாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் பக்கம் இருந்து தேவையான உதவிகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் வழங்குகின்றன. இந்த நிலையில், நாம் ரஷியாவிடம் பெட்ரோலிய பொருள்களை வாங்குவதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி, நாம் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை எடுத்த காரணத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி, ஆட்சி நடத்த முடிகிறது.

அமெரிக்கன் டீப் ஸ்டேட் மூலம் இந்தியாவில் பல அரசியல் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியா அணுசக்தி நாடாக உருவெடுப்பதற்கு தடைகளை ஏற்படுத்துதல், கிரையோஜனிக் தொழில்நுட்பம் நமக்குக் கிடைக்காமல் செய்வது, வேளாண் பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்களை தூண்டிவிட்டு விவசாயிகள் என்ற போர்வையில் புதுதில்லி முற்றுகையிடப்பட்டு செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்ற முற்பட்டது உள்ளிட்டவை அதில் அடங்கும்.

இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கு எதிராக போராட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. கரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான எதிர்ப்பு, இந்திய தடுப்பூசிகள் குறித்து தவறான பிரசாரம் - இவை எல்லாம் சீன டீப் ஸ்டேட் நடவடிக்கைகளாக கருதலாம்.

உலகம் முழுவதும் இடதுசாரிகள் என்ற போர்வையிலும், லிபரல்கள் என்ற பெயரிலும் சென்ட்ரிஸ்ட் என்கிற நிலைப்பாட்டுடனும் அமெரிக்காவின் டீப் ஸ்டேட், சீனாவின் டீப் ஸ்டேட், ரஷியன் டீப் ஸ்டேட் ஆகியவை பணியாற்றுகின்றன. இவற்றின் பணிகள் இந்தியாவிலும் நடைபெறுகின்றன.

நமது நாட்டின் வளர்ச்சியைத் தடை செய்வது, ஜாதி, மத கலவரங்களை உருவாக்குவது, இந்தியாவை துண்டுதுண்டாக உடைப்பது, இப்படி பல வகைகளில் இந்த நாட்டை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்வு நடந்து முடிந்து, தவறுக்கு மன்னிப்புக் கேட்டதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முற்பட்ட பிறகும்கூடக் காலதாமதமாக ஒரு போராட்டம், அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த கரப்பான்பூச்சியால், மன்னிக்கவும் அபிஜீத் தீப்கே என்கிற அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒருவரால், முன்னெடுக்கப்பட்டது என்றால், அது டீப் ஸ்டேட் நடவடிக்கை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments