திணிக்கப்படும் போர்கள்
பல மடங்கு ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளை வல்லரசுகள் வைத்துக் கொண்டு அமைதிக்குப் பதிலாக ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரானுடன் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி ஆத்திரப்பட்டுப் பேசி வெளியிடும் அறிவிப்பை உலகமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஈரானை அழித்துவிட்டதாக அவர் அடிக்கடி கூறி வருகிறார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெறும் போரில் அவ்வப்போது தாக்குதல் நிறுத்தப்படுகின்றன; பின்னர், தொடர்கின்றன. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில் அமெரிக்கா தமது வான்வழித் தாக்குதல்களை நிறுத்திவைத்தது. ஈரானும் பதில் தாக்குதல்களைக் குறைத்தது.
ஹோர்முஸ் நீரிணைப் பாதையை மீண்டும் திறப்பது குறித்து ஓமன் மற்றும் ஈரான் இடையே பேச்சு வார்த்தை முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்து சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்தது.
Advertisement
Advertisement
அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசும் அமெரிக்க அதிபர் திடீரென போர் நிறுத்தத்தைத் தற்காலிகமாக அறிவித்ததற்குக் காரணம் ஆயுதப் பற்றாக்குறை குறித்த கவலைகளே என்று நியூயார்க் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. எனவே, போரைத் தொடர்வதற்கு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது; அதுவரை அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடரும்.
ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க் கப்பலான ஜெரால்டு போர்டு வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, ஜோர்டான், அமீரகம், பஹ்ரைன், கிரீஸ் முதலிய நாடுகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஈரானுடன் ஒரு நல்ல ராஜதந்திர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தி வருகிறது. "அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் தப்பிப் பிழைக்க முடியாது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். ஈரானுக்கு எதிராகக் கூட்டுப் போரைத் தொடங்கிய பிறகு இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்கா அதிபர் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
உலகம் இப்போது வணிக உலகமாக மாறிவருகிறது. பல வகையான வணிகங்களின் போட்டியாக உலக நாடுகள் மாறி வருகின்றன. உலக வல்லரசுகளாக அமெரிக்காவும், சீனாவும் உலக வணிகப் போட்டியை நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, பொருள்களுக்கு வரி மீது வரியைப் போட்டு திக்குமுக்காடச் செய்கிறார்.
இதில் ஆயுத உற்பத்தித் துறை கொடிகட்டிப் பறக்கிறது. ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களை உருவாக்குகின்றனர். போர்கள் நடைபெற்றால்தான் ஆயுங்களை விற்பனை செய்ய முடியும். உலக வல்லரசுகள் எல்லாம் ஆயுதப் போட்டியில் இறங்கியுள்ளன.
ஆயுத உற்பத்தித் துறை என்பது ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் இதர பாதுகாப்புத் தொடர்பான பொருள்களை உற்பத்தி செய்யும் துறையாகும். இது உலக அளவில் மிகப் பெரிய தொழிலாக உள்ளது. இதில் அரசுகளும், தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இந்தத் துறையில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், போர் விமானங்கள், கப்பல்கள், ராணுவ வாகனங்கள் போன்ற பலவிதமான ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. ஆயுத உற்பத்தித் துறையில் தொடர்ந்து தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் துறை ஒரு பெரிய பொருளாதார காரணியாக உள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்தத் துறை ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதுவே ஒரு நாட்டின் இறையாண்மையையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என்று கூறுகின்றனர்.
இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தித் துறை என்பது ஒரு முக்கியத் துறையாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தித் துறை, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்காக பல பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதில் இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறையில், சுயசார்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ’இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின்கீழ், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று மத்திய அரசும், பிரதமரும் கூறுகின்றனர்.
அளப்பரிய ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்துள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா, வட கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் உலக அமைதிக்குத் தடையாகவும், நாடு
களிடையே போருக்குத் தூண்டுதலாகவும் உள்ளன. அமெரிக்கா இஸ்ரேலை கைப்பாவையாக வைத்துக் கொண்டு பாலஸ்தீனத்துடன் போர், ஈரானுடன் போர் என மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது.
ஆரம்பத்தில் அமெரிக்கா வியத்நாமுடன் போர் தொடுத்து, மிகப் பெரிய தோல்வியுடன் திரும்பி வந்தது. அடுத்து, ஆப்கானிஸ்தானுடன் போரிட்டு வேறு வழியில்லாமல் ஓடி வந்தது. சதாம் உசேன் மீது வெறுப்பு ஏற்பட்டு இராக் மீது போர் தொடுத்தது. அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்ட காரணங்கள் பொய் என நிரூபணம் ஆனது.
இப்போது, காஸாவின் மீது போர் தொடுத்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பாராமல் 50,000-க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்வதற்கும் அமெரிக்காவே காரணமாகும். இறந்தவர்கள் போக இருப்பவர்களுக்கும் உயிர்வாழ உணவுப் பொருள்களுக்கும் தடைவிதித்துத் தடுத்து பசியாலும், பட்டினியாலும் கொல்லுகின்றனர். அமைதியை ஏற்படுத்த வேண்டிய ஐ.நா.வும், உலக நாடுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
அணு ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்கிறது என்று காரணம் கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. வலிய வந்த போரை ஏற்றுக் கொண்ட ஈரான் பதிலுக்குப் பதில் ஏவுகணைப் போரை நடத்தி இஸ்ரேலைச் சிதைத்தது. அமெரிக்க வல்லரசும் அணு உற்பத்தி மையங்களில் தாக்குதல் நடத்தி விட்டு, போர் நிறுத்தம் அறிவித்து விட்டது. இதே கால கட்டத்தில் ரஷியா உக்ரைனை முற்றுகையிட்டது. ரஷியா போர் தொடுக்க பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், உக்ரைன் ஐரோப்பிய கூட்டணியாகிய நேட்டோவில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர் தொடுத்தது.
ரஷியாவும், உக்ரைனும் வரலாற்று ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நெருங்கிய தொடர்புடையவை. ரஷியா சோவியத் யூனியனாக இருந்தபோது உக்ரைனும் சேர்ந்து இருந்தது. சோவியத் யூனியன் சிதைந்த போது, உக்ரைன் தனி நாடானது. இதனால், ரஷியா எப்போதும் உக்ரைனை தனி நாடாக அங்கீகரிக்க மறுத்தே வந்தது.
2022 பிப்ரவரி 24 அன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷியா முழு அளவில் தாக்குதல் நடத்தி போரிட்டது. அந்த நாட்டின் பல பகுதிகளை ரஷியா பிடித்துக் கொண்டது. மற்ற பகுதிகளை ஏவுகணைகளை வீசி அழித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவியை அளித்துக் கொண்டிருப்பதால் போர் முடிவுக்கு வரவில்லை.
இவ்வாறு ஆங்காங்கே நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருப்பதால் ஆயுத விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. உலகமே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளான ஐரோப்பிய நாடுகள் ஒரு பக்கமும், ரஷியா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் மறுபக்கமும் எதிரும், புதிருமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வல்லரசு நாடுகளிடம் பெரும்பாலும் அணு ஆயுதங்கள் இருப்பது ஐ.நா. சபைக்குத் தெரியாதா? அணு ஆயுதங்கள் தயாரித்து வைத்திருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றஞ்சாட்டி போர் தொடுக்கின்றன என்பதுதான் வேடிக்கை.
வல்லரசு நாடுகளுக்கு ’வீட்டோ' அதிகாரம் இருக்கும் வரை ஐ.நா.வில் உலக அமைதிக்கான எந்தத் தீர்மானமும் நிறைவேற்ற இயலாது.
1980-களின் பிற்பகுதியில் பனிப்போர் முடிவடைந்த போது, அமெரிக்காவும், பிற வல்லரசு நாடுகளும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரிப்பதையும், சோதனை செய்வதையும் நிறுத்தி விட்டதாக அறிவித்தன. இப்போது, அணு ஆயுதக் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா நாடுகளும் அஞ்சி நிற்கின்றன. அறிவியல் உலகம் எந்த முடிவும் காண முடியாமல் திகைத்து நிற்கிறது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானில் போடப்பட்ட இரண்டு அணுகுண்டுகளின் அழிவு வரலாற்றில் இன்னும் மறையவில்லை. அதைவிட பல மடங்கு ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளை வல்லரசுகள் வைத்துக் கொண்டு அமைதிக்குப் பதிலாக ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் எங்கே போகிறது?
ஆக்கப் பாதையில் போக வேண்டிய உலகம் அழிவுப் பாதையைத் தேடிப் போவதா?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.