FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நியூட்ரினோ ஆய்வுக்கு மீண்டும் ஓர் அங்கீகாரம்

2026-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம் நாட்டின் அறிவியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

15 அக்டோபர் 2026, 1:38 am IST
2026-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிஸ் ஹால்சன் - AP
பகிர்:

நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக 1988, 1995, 2002, 2015 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் ஐந்து இயற்பியல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நியூட்ரினோவைப் பற்றிய ஆய்வு, இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு அடிப்படை மறுசிந்தனைக்கு, பிரபஞ்சத்தைக் கவனிப்பதற்கான ஒரு புதிய வழிமுறையை வகுத்துள்ளது.

2026-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெல்ஜியம் நாட்டின் அறிவியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் நிகழும் தீவிர வானியல் நிகழ்வுகளில் இருந்து தோன்றும் உயர்சக்தி கொண்ட 'நியூட்ரினோ'க்களின் கண்டுபிடிப்புக்காகவும், அண்டார்டிகாவின் தென் துருவத்தில் உள்ள 'ஐஸ்க்யூப்' நியூட்ரினோ ஆய்வகத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது.

1988- ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு மியூவான் நியூட்ரினோவின் கண்டுபிடிப்புக்காக, லியோன் லெடர்மேன், மெல்வின் ஸ்வார்ட்ஸ் மற்றும் ஜாக் ஸ்டீன்பெர்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முடுக்கி மூலம் உருவாக்கப்பட்ட முதல் நியூட்ரினோ கற்றையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி, மியூவானுடன் சேர்ந்து உருவாகும் நியூட்ரினோ, எலக்ட்ரானுடன் சேர்ந்து உருவாகும் நியூட்ரினோவிலிருந்து ஒரு தனித்துவமான துகள் என்பதை நிரூபித்தனர்.

Advertisement

Advertisement

1995-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, ஃபிரடெரிக் ரெய்ன்ஸுக்கு 'நியூட்ரினோவைக் கண்டறிந்ததற்காக' வழங்கப்பட்டது. கிளைட் கோவனுடன் இணைந்து, ரெய்ன்ஸ் 1956-ல் சவன்னா ஆற்றங்கரை அணு உலையில் முதன்முறையாக நியூட்ரினோவைக் கண்டறிந்தார்.

2002-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அண்ட நியூட்ரினோக்களைக் கண்டறிவதில் முன்னோடிகளாகத் திகழ்ந்ததற்காக ரேமண்ட் டேவிஸ் ஜூனியர் மற்றும் மசடோஷி கோஷிபா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. டேவிஸ், முதன்முதலில் சூரிய நியூட்ரினோக்களை அளந்தார். கோஷிபா, சூரிய நியூட்ரினோக்களை நிகழ்நேரத்தில் உறுதிப்படுத்தி, ஒரு சூப்பர்நோவாவிலிருந்து நியூட்ரினோக்களைப் பிடித்து, நியூட்ரினோ வானியலுக்கு அடித்தளமிட்டார்.

2015-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்பதை நிரூபிக்கும் நியூட்ரினோ அலைவைக் கண்டுபிடித்ததற்காக, டகாக்கி கஜிதா மற்றும் ஆர்தர் மெக்டொனால்டுக்கு வழங்கப்பட்டது. கஜிதா, 1998-இல் வளிமண்டல நியூட்ரினோக்கள் பயணிக்கும் தொலைவைப் பொருத்து அவற்றின் தன்மை மாறுபடுவதைக் காட்டினார். மெக்டொனால்டு, சூரியனின் எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் மறைந்துவிடாமல், மற்றவைகளாக உருமாறியுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார்.

அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மேலும் மேலும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது. அதனால் அது மாயத் துகள், மர்மத் துகள் என்றும் அழைக்கப்படுகிறது.

பௌலி தவிர்க்கை தத்துவத்தை வெளியிட்ட வொல்ஃப்கேங் பௌலி, 1930-இல் மின் நடுநிலைத் துகள் ஒன்றை பரிந்துரைத்து நியூட்ரான் என்று அழைத்தார். ஆனால், 1932-இல் தற்போது நியூட்ரான் என்று அறியப்படும் துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பௌலியின் கருதுகோள் துகளுக்கு என்ரிக்கோ ஃபெர்மியால் நியூட்ரினோ என்று மறுபெயரிடப்பட்டது.

பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்தது என்பதற்கான தடயங்களை வழங்கும் அரிய வகை நியூட்ரினோ கூட்டத்தைப் பற்றி ஹால்சன் விரிவான ஆய்வை மேற்கொண்டார். அவரது அறிவியல் வாழ்க்கை பெல்ஜியத்தில் உள்ள கே யு லூவனில் தொடங்கியது, அங்கு அவர் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் மற்றும் இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1971-ஆம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மன்றத்தில் பணிபுரிந்தபோது, விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம் அழைப்பை ஏற்று அங்கு பணியில் சேர்ந்தார்.

1980-இல் ஹால்சன் நியூட்ரினோக்களில் ஆர்வம் கொண்டு தனது முனைவர் பட்ட ஆய்வாளர் என்ரிக் ஸாஸுடன் இணைந்து, ஒரு நியூட்ரினோ தொலைநோக்கியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார்.

ஹால்சன் 1988-இல், தென்துருவத்துக்கு அடியில் உள்ள மிகப் பெரிய, ஒளி ஊடுருவக்கூடிய பனிப்பரப்பை ஒரு துகள் கண்டறியும் கருவியாகப் பயன்படுத்தும் ஒரு துணிச்சலான தீர்வை முன்மொழிந்தார்.

புவி-தென்துருவத்துக்கு அருகில் 1.5 கி.மீ. பனிக்கு அடியில், ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகம் மறைந்திருக்கும் துகள்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. உலகின் முதல் ஜிகா டன் நியூட்ரினோ கண்டறியும் கருவியான ஐஸ்க்யூப், வானியல் இயற்பியலாளர்களால் விண்வெளிப் பொருள்கள் உருவாக்கும் நியூட்ரினோக்களை உற்றுநோக்குவதன் மூலம் அவற்றை நன்கு புரிந்துகொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கன கி.மீ. பனிப்பரப்பை உள்ளடக்கிய ஐஸ்க்யூப் ஆய்வகம் கட்டுவதற்குப் பல ஆண்டுகள் ஆனது. 2011-இல் கட்டி முடிக்கப்பட்டது.

ஒரு நியூட்ரினோ, செரன்கோவ் கண்டறியும் கருவியில் உள்ள மிகத் தெளிவான நீருடன் வினைபுரியும்போது, அது ஒரு மின்னூட்டம் பெற்ற துகளை உருவாக்குகிறது. இந்த மின்னூட்டம் பெற்ற துகள், ஒளியைவிட அதிக வேகத்தில் நீரின் வழியாகப் பயணிக்கிறது; இதனால், மின்காந்தத் தன்மையுள்ள 'செரன்கோவ் கதிர்வீச்சு' வெளியாகிறது. இந்தக் கதிர்வீச்சை, கருவியைச்சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் அதிக உணர்திறன் கொண்ட பல உணர் கருவிகள் மூலம் கண்டறிய முடியும்.

அதைத் தொடர்ந்த ஆய்வுகள், இந்தத் துகள்களில் சில நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் வெகு தொலைவில் இருந்து உருவானவை என்பதற்கான ஆதாரங்களை வழங்கின. அந்தக் கண்டுபிடிப்பு, பிரபஞ்சத்துக்குள் ஒரு புதிய பாதையை திறந்தது; அதுவே நியூட்ரினோ வானியல் என அழைக்கப்படுகிறது.

வளர்ந்து வரும் இந்தத் துறையில் உற்சாகமடைய நிறைய விஷயங்கள் இன்னும் இருப்பதால் எனது மரபு குறித்து சிந்திக்க எனக்கு நேரமில்லை, நான் எதிர்காலத்தை மட்டுமே பார்க்கிறேன் என்று கூறி நியூட்ரினோ ஆய்வில் முனைப்புடன் இருக்கிறார் ஹால்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments