பேச்சுத் தமிழுக்கு பேரியக்கம்
தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே தமிழ்ப் பேச்சு ஒழிந்து வருவது அவலத்தின் உச்சம் என்பதைப் பற்றி...
அண்மைக்காலமாக, பெரும் பொறுப்புகளில் உள்ளவர்களும், பொதுவெளிகளில் பேசுகிறவர்களும் நிகழ்த்துகிற உரைகளை, எழுதியதை வாசிக்கிற அழகைப்பார்த்தால் அவர்களது தாய்மொழி தமிழ்தானா என்கிற சந்தேகம் எழுகிறது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள், தமிழ்ச் சொற்களை ஆங்கிலம்போல் உச்சரிப்பதும், அதைக்கூட அரைகுறையாக, தட்டுத் தடுமாறி மொழிவதும், அதையே திரும்பத் திரும்ப 'ரீல்ஸ்' ஆக்கி நகைப்புக்கு இடம் கொடுத்து ஒளிபரப்பப்படுவதும் காண, கேட்க வேதனை அளிக்கிறது. 'விதியே விதியே தமிழச் சாதியை என்செயக் கருதி இருக்கிறாயடா?' என மகாகவி பாரதிபோல் விதியிடம் வினவ வைத்து விடுகிறது.
இது திடீரென்று ஏற்பட்ட மாற்றம் அன்று. பல ஆண்டுகளாகத் தமிழைப் புறந்தள்ளி, ஆங்கிலம் முதலான பிற மொழிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த முன்னுரிமையால், அதைவிடவும் தமிழில் பேசினால் தரக்குறைவு என்ற தாழ்வு மனப்பான்மையால், வாசிப்புக்கும் பேச்சுக்கும் வகுப்பறைகளில் இடம் கொடாமையால், மீறிப் பேசினால் ஒறுத்தல் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தால் தமிழைத் தமிழ்நாட்டில் ஒலிக்க வழியில்லாமல் செய்து விட்டிருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போதாக்குறைக்கு, புதுப்புதிதாய்ப் பெருகிவரும் ஊடக சாதனங்கள் காட்சிகளுக்கே அதிகக் கவனம் அளித்துவருவதும் முக்கியக் காரணமாகிறது.
Advertisement
Advertisement
ஒரே கூரைக்குக் கீழ் வசிக்கிற குடும்பத்தினர்கூடத் தமக்குள் பேசிக் கொள்ள வழியில்லாமல் வாட்ஸ்ஆப் வழியடைத்துவிட்டது. 'மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ரெடி, வரலாம்' என்பதைக் கூட, வாட்ஸ்ஆப்பில் செய்தியாக, ஒருவீட்டின் அடுத்தடுத்த அறைகளில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. முகம் பார்க்கும் தொலைவில் இருப்பவர்கள்கூட, முகநூலில்தான் உறவாடுகிறார்கள். உரையாடல் என்பது 'ரீல்ஸ்' களில் மட்டும்தான்.
'வெளியூருக்கு வேலைக்குச் செல்பவர்கள் எல்லோரும் எங்கே போனாலும் அவர்கள் அவங்க தாய்மொழியை உடன் கொண்டு போறாங்க. வீட்டில் தாய்மொழியில்தான் பேசுறாங்க. ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ்நாட்டு எல்லை கடந்தவுடன் தன் தாய்மொழியான தமிழை மறந்து விடுகிறான்' என்று அண்மையில் மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, புதுதில்லியில் 'தினமணி' பதிப்புத் தொடங்கியபோது பேசினார்.
அதுவும் அவர் காலத்திலேயே சுருங்கிப்போய், தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளேயே தமிழ்ப் பேச்சு ஒழிந்து வருவது அவலத்தின் உச்சம். எனக்குத் தெரிய என் இளம்பருவத்தில் செவிமடுத்த எத்தனையோ தமிழ்ச் சொற்கள் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்து போய்விட்டன.
பிரான்மலையாம் பறம்புமலைச் சாரலில் பிறந்து வளர்ந்த எனக்கு, கபிலரின் சங்கப் பாடல்களின் சொற்கள் புழக்கத்தில் இருந்தமை தெரியும். பல புறநானூற்றுப் பாடல்களை உரையின்றிப் புரிந்து கொள்ளும் அளவுக்கு, இருபதாம் நூற்றாண்டின் 90-களில் பல தமிழ்ச்சொற்கள் பேச்சுவழக்கில் இருந்தன.
உரையாசிரியர்களைவிட, திருக்குறள் தந்த திருவள்ளுவர் மக்களுக்கு நெருக்கமாய் இருந்தார். கம்பர் எளிமையாய்ப் பிடிபட்டிருந்தார். ஒüவையார்மொழி அனைவர்க்கும் புரிந்தது. பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பள்ளிக்குச் செல்லாத பல பாமர மக்களுக்குச் சித்தர் பாடல்களும், காளமேகப்புலவர் முதலானவர்களின் தனிப் பாடல்
களும் பரிச்சயமாயிருந்தன. இன்றைக்கோ, கண்ணதாசன் பாடல்களுக்கே உரையெழுத வேண்டியிருக்கிறது. அதையும்கூட, சரியாகப் படிக்கத் தெரியாத பட்டதாரிகளே, தமிழ்நாட்டில் அநேகர். ஏட்டெழுத்து அறியாத எம் ஊர்மக்களின் வாக்கில், ஒüவையார், திருவள்ளுவர் அருளிய அறக்கருத்துகள் ஒளிரக் கேட்டிருக்கிறேன்.
வழிபாட்டுத் தலங்களில் ஒலிக்கும் இறைவணக்கப் பாடல்களைச் செவிமடுத்துச் சிந்தையில் இருத்திப் பக்தியுடன் பாடுபவர்கள் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். பஜனைக் கூடங்களில் பாடிப் பழகிய பாடல்களும் பாத யாத்திரையின்போது கூடிப் பாடிய கந்தர்சஷ்டிக் கவசமும் ஸ்கந்த குரு கவசமும் எத்தனையோ பேருக்கு இதமளித்திருக்கின்றன.
அம்மை கண்ட நாள்களில் பாடப்பட்ட மாரியம்மன் தாலாட்டும், சித்திரா பௌர்ணமிப் படையலின்போது படிக்கப்பட்ட சித்திரபுத்திர நாயனார் வரலாறும் மறக்க முடியாதவை. புரட்டாசி மாதத்தில் விரித்துரைக்கப்பட்ட இராமாயண ஏடும், வைகாசி மாதத்தில் படிக்கப்பட்ட மகாபாரத விராட பருவமும் மக்கள் மனங்களில் விழுமியங்களைத் தொடர்ந்து விதைத்து வந்தன.
திண்ணைப் பள்ளிக் கூடங்கள்கூட இல்லாத ஊர்களில் பேச்சுத் தமிழைப் பேணிக் காக்க இத்தகு இலக்கிய முயற்சிகள் பெரிதும் உதவின. மெல்ல வளர்ந்த பிரசங்கங்கள், மேவி எழுந்த அரசியல் முழக்கங்கள் அனைத்துக்குள்ளும் பேச்சுத் தமிழ் அடிநாதமாய் இருந்தது.
இன்றைக்கு இருப்பதுபோல், ஒலிபெருக்கி வசதிகள் இல்லாத காலத்தில் நின்று முழங்கிய மகாகவி பாரதி, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. தியாகி சுப்பிரமணிய சிவா, தீரர் சத்தியமூர்த்தி, தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உரைகளால் விழிப்படைந்த தமிழர்கள் எத்தனை பேர்? தேசிய, திராவிட, பொதுவுடைமை இயக்கத்தவர்களின் சீரிய தமிழ் எத்தனையோ பேர்களின் சிந்தையைக் கிளர்த்தியதே!
அவர்கள் மட்டுமா? தனித்தமிழ் இயக்கத் தகைமைப் பொழிவாளர் மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.க., சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, கவித்துவம் துலங்கக் கம்பனைக் கண்முன் நிறுத்திய ரசிகமணி டி.கே.சி., சன்னக்குரலில் ஆங்கிலச் செழுமையுடன் மெல்லப்பேசிய அ.சீ.ரா., பக்தி இலக்கியத்தின் பயனுறு விழுமியங்களைச் சமகாலத்துக்கேற்பச் செழுந்தமிழில் விரித்துரைத்த தவத்திரு குன்றக்குடி அடிகளார், திசையதிரும் பெருமுழக்கால் கேட்போரைக் கவர்ந்திழுத்த ஜீவா, தெய்வத் தமிழ் உரைத்த திருமுருக கிருபானந்தவாரியார், தனிப்பொழிவோ, பட்டிமன்றமோ எதுவாயினும் தன் மணிக்குரலால் ஈர்த்திருந்த பேராசிரியர் அ.ச.ஞா., நாடகப் பாங்கொளிரப் பேருரை வழங்கிய புலவர் கீரன், சிலேடைச் செம்மல் வாகீச கலாநிதி கி.வா.ஜ., தமக்குப் பின்னர் சோ.சத்தியசீலன், அ.அறிவொளி, இலங்கை ஜெயராஜ் முதலான சீடர்களை உருவாக்கிய திருச்சிராப்பள்ளி இராதாகிருஷ்ணன், சிலம்பை முன்வைத்துப் பெயர் பெற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சிலம்பொலி சு.செல்லப்பன், கம்பனைத் தன் தெய்வமாய்க் கொண்டாடிய கம்பன்அடிப்பொடி சா.கணேசன், திருக்குறளால் பெயர் பெற்ற திருக்குறளார் வீ.முனுசாமி, நெல்லைத் தமிழின் நெடி மணக்கப் பேசும் பெரும்புலவர் பேராசிரியர் பா.நமச்சிவாயம், நெல்லைக் கண்ணன், செட்டிநாட்டுச் செந்தமிழ் பேசும் கண. சிற்சபேசன், மதுரமயமான மதுரைத் தமிழ் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா எனப் பேச்சுத் தமிழுக்குப் பெரும் பங்காற்றிய மாமனிதர்களால் செந்தமிழ், செழுந்தமிழாய்ச் சிறந்த கதை உலகறியும். இவர்களின் மரபில் இன்னும் இருக்கும் ஒரு சிலரை அடுத்து எதிர்காலம் யாரிடம் இனிப் பேச்சுத் தமிழைக் கேட்கப் போகிறது?
பசி மறந்து, துயில் துறந்து, களைப்பின்றிக் கேட்டுச் சிந்தனையைச் செழுமைப்படுத்திக் கொண்ட தலைமுறையால் சீரிளமைத் திறத்துடன் செந்தமிழ் செழித்திருந்தது. எண்சுவையும் ததும்ப உரைத்த அறிஞர்கள் இருந்த இடத்தில் இப்போது, நகைச்சுவை என்ற பெயரில் மலிந்த சொல்லாடல்கள், துணுக்குத் தோரணங்கள், இரு பொருள் தொனிக்கும்
வசனங்கள் அரங்கேறுகின்றன. ஒரு பிரபலப் பேச்சாளர், 'இப்போது இந்தக் கருத்தைச் சொல்லி முடித்ததும் கை தட்டவேண்டும் என்பதையே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்று மனம் நொந்து சொன்னார், இவர்களைத்தான்,
'செவியுணவிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
(திருக்குறள் 420)
என்று சபித்துப் பாடினார் திருவள்ளுவர். என்ன செய்வது?
தொலைக்காட்சி வருகையால் திண்ணைப் பேச்சு இல்லாது போனது. கரோனாத் தொற்றுக்குப் பிறகு, முற்ற முழுக்க அறிதிறன்பேசியே நம்மைக் கையகப்படுத்திக் கொண்டது. போதாக்குறைக்கு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சாதனத்தின் குரல்களே உரத்து ஒலிக்கின்றன.
காலப்போக்கில் இவை தவிர்க்க முடியாதவை எனினும், காலத்துக்கேற்ப வளரும் தன்மை உடைய மொழியை, ஊனமாக்கி, ஒட்டுமொத்தமாய் முடக்கிவிடுவது தமிழ் இனத்துக்கு வீழ்ச்சியை உண்டாக்கி விடும். செம்மொழி என்பதற்கான சீரிய பண்பு, பண்டைக் காலம் முதல் பழகிவந்த ஒரு மொழி இன்றைக்கும் இயல்பில் இயக்கத்தில் இருக்கிறது என்பதுதானே.
இவ்வியக்கம் மெல்ல மெல்ல அருகி இல்லாது போனால், எப்படி இம்மொழி செம்மொழி ஆகும்? மெல்லத் தமிழ் இனி, உலக வழக்கு ஒழிந்து சீரிளமைத் திறம் குறைந்து, செயல் இழந்து போய்விடுமோ? என்று எழுகிற அச்சம் மிகையானதும் இல்லை; பொய்யானதும் இல்லை. இதை மாற்ற மாற்றுவழி ஏது? எனச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வாசிப்பு இயக்கம்போல, பேச்சுத் தமிழுக்கு என்றே பேரியக்கம் நடத்தப் பெறல் வேண்டும். இல்லங்கள்தோறும் இனிய தமிழ் மொழி பேச்சு மொழியாக உயிர்ப்புற வேண்டும். பொதுவெளிகளில் தமிழ் பேசுகிற இலக்கிய அரங்குகளுக்கு அரசு உதவி நல்க வேண்டும்.
பள்ளி முதலான கல்வி நிறுவனங்களில் பேச்சுத் தமிழும் பெயருக்காக அன்றிப் பின்பற்றத் தகுந்த பாடமாக அமைந்தால் நன்று. இல்லையென்றால், 'வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ' என்று மகாகவி பாரதி பாடியதுபோல் காலம் நம்மைக் கை கழுவித் துரத்திவிடும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.