'காந்திகிராமம்' துவங்கிய புரட்சிப் பெண் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன்!
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 'காந்திகிராமம்' துவங்கிய புரட்சிப் பெண் டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் பிறந்தநாள் இன்று!
1904, இதே நாளில் ஆகஸ்ட் 18 அன்று புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கு மகளாக நெல்லையில் பிறந்தார் சௌந்தரம்.
சுட்டிப் பெண்ணாக சுற்றித் திரிந்த தன் மகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான உறவுக்காரர் டாக்டர் சௌந்தரராஜனை 1918 ஆம் ஆண்டு, மணம் முடித்து வைத்தார் சுந்தரம். மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்தார் சௌந்தரராஜன்.
அந்தக் காலத்தில் பிளேக் நோய் தாக்கி மக்கள் பலரும் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். தன் உயிரை துச்சமென மதித்து அவர்களுக்கு சிகிச்சை தந்தார் சௌந்தரராஜன். அதே பிளேக் நோய் அவரையும் தாக்கியது; மரணப் படுக்கையில் விழுந்தார்.
Advertisement
செய்வதறியாது திகைத்த தன் மனைவி 14 வயது சௌந்தரத்தை அழைத்தார் சௌந்தரராஜன். "தொடர்ந்து நீ படிக்க வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் கல்வி கற்பதை நிறுத்திவிடாதே. குறிப்பாக மருத்துவப் படிப்பை படித்து முடித்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
"எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், நீ என்னையே நினைத்துக் கொண்டிராதே. என்னை மறந்துவிட்டு, வேறொரு திருமணம் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தவர், 1925-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
வேறு எந்தக் குடும்பத்தில் இதுபோன்ற மரணம் நிகழ்ந்திருந்தாலும், சிறுமிக்கு அதுதான் வாழ்க்கையின் எல்லையாக இருந்திருக்கும். சுந்தரம் ஐயங்கார் குடும்பமோ, புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் காந்திய சிந்தனைகளுக்கு உதாரணமாக அன்றே சுட்டிக்காட்டப்பட்ட குடும்பம்.
கணவரை மிக இளம் வயதிலேயே பறி கொடுத்த சௌந்தரம், கல்வியைத் தொடர வசதியும் வாய்ப்பும் அமைத்துத் தந்தது குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்து, இறந்துபோன கணவரின் ஆசைப்படி தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்தார் சௌந்தரம்.
இங்குதான் விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியடிகளின் மருத்துவருமான சுசீலா நய்யரின் அறிமுகம் சௌந்தரத்துக்குக் கிடைத்தது. காந்தியை சுசீலாவுடன் சென்று சந்தித்தார் சௌந்தரம். அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட சந்திப்பு அது!
இதையும் படிக்க | திருவையாறில் ஆகஸ்ட் புரட்சி!
காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க எண்ணிய சௌந்தரத்தைத் தடுத்து நிறுத்தினார் காந்தி."முதலில் மருத்துவப் படிப்பைப் படித்து முடி.பிறகு
இங்கு வா"என்று கூறினார்.
லேடி ஹார்டிங் கல்லூரியின் தங்கப் பதக்கத்தை வென்ற சௌந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் நோய் மற்றும் மகப்பேறியல் பட்டமும் பெற்றார். 1936-ஆம் ஆண்டு, தன் 32-ஆவது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
அடுத்து அவர் சென்ற இடம் காந்தியின் சேவா கிராம் ஆசிரமம். தமிழகத்தின் செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்த சௌந்தரம், காதி உடுத்தவும் நூல் நூற்கவும் இங்கு கற்றுக்கொண்டார்; வெறும் தரையில் படுத்து உறங்கினார்; கழிவறைகளைச் சுத்தம் செய்தார்; கிராம வாழ்க்கை முறைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார்.
இங்குதான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான ஜி.ராமச்சந்திரனை சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர்.
ராமச்சந்திரன் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொள்வதாகக் காந்தியிடம் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் எழுதி கையெழுத்திட்டுத் தந்திருந்தார். எனவே, காதல் ஜோடி மணமகனுக்கு 35 வயதாகும் வரை காத்திருந்தது.
ஒருவழியாக திருமணம் செய்துகொள்ளும் தங்கள் எண்ணத்தை காந்தியிடம் சொன்னார்கள். காந்தியும் ராஜாஜியும் சுந்தரம் ஐயங்காரிடம் மகளின் மறுமணத்துக்கு அனுமதி கோரினர். சுந்தரம் ஐயங்கார் திட்டவட்டமாக முடியாது என்று இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
`ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது, கடிதப் போக்குவரத்து கூடாது’ எனக் கடும் விதிகளை விதித்து, ஓர் ஆண்டு முடிந்தும் அதே காதல் இருந்தால் உங்கள் திருமணத்தை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி ஓராண்டு கழித்து தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினார் காந்தி.
ஓர் ஆண்டு அவ்வாறு இருவரும் சந்திக்காமல் இருந்தார்கள். பின்னர் காதலர் இருவரும் வந்து சந்திக்க, அவர்கள் மன உறுதியைப் புரிந்துகொண்டார் காந்தி.
1940 நவம்பர் 2 அன்று, ராஜேந்திர பிரசாத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் தம்பதிக்கு சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் எளிமையாக திருமணம் செய்துவைத்தார் காந்தி.
இதையும் படிக்க | எம்.ஜி.ஆர். திறந்துவைத்த கருணாநிதிபுரம்!
மனைவி கஸ்தூரிபா காந்தி நூற்ற கதர் சேலையை சௌந்தரத்துக்குப் பரிசளிக்க, அதையே உடுத்திக்கொண்டு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விதவை மறுமணம், வெவ்வேறு சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிப் பின்புலம் கொண்டவர்கள்; வேறு மாகாணத்தவர்கள்; பெற்றோர் சம்மதமின்றி திருமணம் என்பதால், இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது.
1942 தொடங்கி சௌந்தரம் நேரடியாக சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது இவர் கேரளப் பகுதியெங்கும் சுற்றுப் பயணம் செய்து நாட்டு விடுதலைக்குப் போராடினார்.
தேச விடுதலைக்காக சிறை சென்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். இவரது நடவடிக்கையைக் காரணம் காட்டி திருவிதாங்கூர் சமஸ்தானம் இவரை சமஸ்தானத்தை விட்டு வெளியேற்றியது.
ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்ட சாவர்க்கர் ஆங்கிலத்தில் எழுதிய
'எரிமலை' என்ற நூலை இவர் மொழிபெயர்க்க அது காரைக்காலில் அச்சாகி
எங்கும் ரகசியமாக வினியோகமாகி சுதந்திரக் கனலை எங்கும் பரப்பியது.1943-இல் டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
அன்னை கிராமிய மருத்துவப் பணி என்ற பெயரில் இவர் பல கிளைகளை அமைத்து மக்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை மேற்கொண்டார்.
காந்தியின் வழிகாட்டலில், காந்தி தொடங்கிய கஸ்தூரிபா டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகிகளாகப் பணியாற்றினர் தம்பதியினர்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் சௌந்தரம் கையில் கஸ்தூரிபாவின் ஓவியத்தைத் தந்து, டிரஸ்ட்டின் தென்னிந்திய நிர்வாகியாக அவரை அறிவித்தார் காந்தி.
எந்த வசதி வாய்ப்பும் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் தற்சார்புகொண்ட காந்தி கிராமங்களை இந்தியா முழுவதும் தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்க எண்ணிய சௌந்தரமும் ராமச்சந்திரனும், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி கிராமத்தை ஒட்டி, 1947 அக்டோபர் 7 அன்று ‘காந்திகிராமம்’ ஒன்றை நிறுவினர்.
இரண்டு ஏக்கர் நிலத்துடன் அன்று ஆரம்பிக்கப்பட்ட காந்தி கிராமம் என்று 350 ஏக்கர் நிலப் பரப்பில் செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க தங்கள் பணிகளைத் தாங்களே செய்ய இங்கு வந்த தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டனர். காய்கறி விளைவிப்பது முதல், சமைப்பது, துணி நெய்வது, சுத்தம் செய்வது என்று அத்தனையும் தாங்களே செய்தனர். இங்கு அமைக்கப்பட்ட கஸ்தூரிபா இலவச மருத்துவமனை மூலம் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார் சௌந்தரம்.
இதையும் படிக்க | அய்யம்பேட்டையில் பவள விழா காணும் காந்தி நிலையம்!
‘ஆரோக்கிய சேவகர்’ என்று அழைக்கப்பட்ட தன்னார்வப் பெண்களுக்கு அடிப்படை மருத்துவம் சொல்லித்தரப்பட்டு, அவர்கள் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளிகள் இல்லாத பகுதிகளில் ஆசிரியர்களாகவும், மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் செவிலியர்களாகவும், கலவரங்கள் வெடித்த இடங்களில் சமூக நல்லிணக்கத்துக்குப் போராடும் களப் போராளிகளாகவும் இந்த ஆரோக்கிய சேவகர்கள் பணியாற்றினர்.
ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட காந்திகிராமப் பள்ளி, கல்லூரியாக வளர்ந்து 1976-ஆம் ஆண்டு, காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது.
1952 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆத்தூர் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சௌந்தரம். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார்.
1962-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சௌந்தரத்தின் நேர்மையும் திறமையும், மக்கள் நேசப் பாங்கும் நேருவை வெகுவாகக் கவர, கல்வித்துறை துணை அமைச்சராக அவரை நியமித்தார் நேரு. தமிழகப் பெண் ஒருவர் மத்திய அரசவையில் துணை அமைச்சர் பதவியில் அமர்ந்தது அதுவே முதன்முறை.
தொடக்கக் கல்வியை நாடு முழுவதும் இலவசமாக்கிய பெருமை, அப்போதைய கல்வி அமைச்சர் சௌந்தரத்தையேச் சேரும். நாட்டு நலப்பணித் திட்டத்தை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கொண்டுவந்ததும் இவரது முக்கியப் பங்களிப்புதான். அதே ஆண்டு சௌந்தரத்தின் சமூகப் பணியைப் பாராட்டி அவருக்கு பத்மவிபூஷண் பட்டம் வழங்கிக் கௌரவித்தது மத்திய அரசு. இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது மத்திய அரசு.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார் சௌந்தரம். அதன்பின் அரசியலில் இருந்து விலகியவர், முழு நேர சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1984 அக்டோபர் 21- தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டார் சௌந்தரம்.
அவரது பெயரை இன்னமும் சொல்லியபடி கம்பீரமாக நிற்கிறது காந்திகிராமம்!
(ஆக. 18 - டாக்டர் சௌந்தரம் ராமச்சந்திரன் பிறந்தநாள்)