டாலருக்கு முடிவு கட்டுமா பிரிக்ஸ்? என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் டாலருக்கு மாற்றாக புதிய பணப்பரிவர்த்தனை முறை அறிவிக்கப்படுமா?
தில்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக புதிய பணப்பரிவர்த்தனை முறை பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. பின்னர், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கிறது. அதன்படி, இந்தக் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
‘மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை கட்டமைத்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள், உலக மக்கள் தொகையில் 49.5 சதவிகிதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40 சதவிகிதத்தையும் உலக வா்த்தகத்தில் 26 சதவிகிதத்தையும் கொண்டிருப்பதால், சர்வதேச அளவில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷியா - உக்ரைன் போர், ஈரான் - அமெரிக்கா போர், ஹோர்முஸ் முடக்கம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி கொள்கை என உலகளாவிய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரிக்ஸ் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பிரிக்ஸ் அமைப்பில் அல்லாத உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தையும் பயன்பாட்டையும் படிப்படியாகக் குறைப்பதற்கான நடவடிக்கையில், நீண்ட காலமாக பிரிக்ஸ் நாடுகள் முயன்றுவரும் ’டி-டாலரைசேஷன்’ எனப்படும் டாலரை மதிப்பிழப்பு செய்வது தொடர்பாக தீர்க்கமான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
டி-டாலரைசேஷன் ஏன்?
தற்போது உலகளாவிய வர்த்தகம் முழுவதும் அமெரிக்காவின் டாலரை நம்பிதான் இயங்குகிறது. உதாரணமாக, சென்னையிலிருக்கும் ஒரு நிறுவனம், மாஸ்கோ நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமானால் நேரடியாக வாங்கிவிட முடியாது.
இதற்காக ஸ்விஃப்ட் (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication) எனப்படும் சர்வதேச வங்கிகளுக்கு இடையேயான செய்தி பரிமாற்ற அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. முதலில், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தின் வங்கியிலிருந்து சர்வதேச வங்கியில் டாலராக மாற்றப்பட்டு, பின்னர் ரஷியாவின் நாணயமான ரூபிள்-ஆக மாற்றி, மாஸ்கோ நிறுவனத்துக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டாலரைப் பயன்படுத்தாத இரு நாடுகள் பணப் பரிமாற்றத்துக்காக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற நிலை இருக்கிறது.
இந்த நடைமுறையை மேற்கொள்ளும் அனைத்து வங்கிகளும் ஸ்விஃப்ட் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், உக்ரைன் - ரஷியா போரின்போது, ரஷியாவைச் சேர்ந்த பல முக்கிய வங்கிகளை ஸ்விஃப்ட் நீக்கியது. இதனால், ரஷியாவின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்தது.
பிரிக்ஸ் பே என்றால் என்ன?
இதுபோன்ற சவால்களை சமாளிக்கவும், டாலரின் ஆதிக்கத்தை குறைக்கவும் கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே ’பிரிக்ஸ் பே’ (BRICS Pay) என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பிரிக்ஸ் வணிக கவுன்சில் அறிமுகம் செய்தது.
இது பிரிக்ஸ் நாணயமாக அல்லாமல், எல்லை கடந்த டிஜிட்டல் பேமெண்ட் கட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் யுபிஐ (UPI), ரஷியாவின் எஸ்பிஎஃப்எஸ் (SPFS), சீனாவின் சிஐபிஎஸ் (CIPS), பிரேசிலின் பிக்ஸ் (Pix) போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை ஒன்றாக இணைக்கிறது பிரிக்ஸ் பே.
2024 அக்டோபரில் மாஸ்கோவில் நடைபெற்ற பிரிக்ஸ் வணிக மாநாட்டில் ’பிரிக்ஸ் பே’ காட்சிப்படுத்தப்பட்டது. அந்தாண்டு இறுதி முதலே, ரஷியாவில் சில மாகாணங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னோட்ட (Pilot) முறையில் செயல்முறைக்கு வந்தது.
உதாரணமாக, இந்தியாவிலிருந்து ரஷியா செல்லும் சுற்றுலாப் பயணி ஒருவர், பிரிக்ஸ் பே செயலியை பதிவிறக்கம் செய்து, க்யூ-ஆர் கோட் ஸ்கேன் செய்து ரஷிய கடைகளின் பணத்தை செலுத்த முடியும். ரஷிய நாணயமான ரூபிள்-க்கு நிகரான இந்திய மதிப்பு எடுத்துக் கொள்ளப்படும். இதனால், சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களில் காத்திருந்து இந்திய நாணயத்தை ரஷிய நாணயமாக மாற்ற தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது.
வருங்காலங்களில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த நாடுகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிரிக்ஸ் பே மூலம் பணம் செலுத்தும் பட்சத்தில் பெருமளவிலான சேவைக் கட்டணம் குறையும்.
தற்போது துருக்கி, இலங்கை, எகிப்து, மாலத்தீவு ஆகிய நாடுகளில் பிரிக்ஸ் பே இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் உலக வர்த்தகத்தில் 20 சதவிகிதத்தை பிரிக்ஸ் பே கையாளுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய முன்மொழிவு
பிரிக்ஸ் பே-வின் அடுத்த கட்ட நகர்வாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (சிபிடிசி) இணைப்பை இந்தியா முன்மொழிந்துள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் என்பது ஒவ்வொரு நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் டிஜிட்டல் பணமாகும். இந்தியாவின் இ-ரூபாய், சீனாவின் டிஜிட்டல் யுவான் போன்றவையாகும். பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைத்தால் சுற்றுலாப் பயணிகள் முதல் சிறுகுறு வியாபாரிகள் வரை பயன்பெறுவார்கள் என்று இந்தாண்டு தொடக்கத்திலேயே இந்தியா முன்மொழிந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், வேகமான கட்டண அமைப்புகள் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது குறித்து பிரிக்ஸ் நாடுகள் தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிவித்தார்.
என்ன செய்யப் போகிறார் டிரம்ப்?
உலக வர்த்தகத்தில் 30 சதவிகிதத்தை யுவான் நாணயத்தில் மேற்கொள்ளும் சீனாவும் 9 நாடுகளில் யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட்டை விரிவுபடுத்தியுள்ள இந்தியாவும், லத்தீன் அமெரிக்காவில் பிக்ஸ் நாணயம் மூலம் ஆதிக்கம் செலுத்தும் பிரேசிலும் இணைந்து பிரிக்ஸ் பே-வை மேம்படுத்தி, சிபிடிசி-க்களை இணைந்தால் டாலரின் உதவியின்றி சென்னை வியாபாரியால் மாஸ்கோவுக்கு நொடியில் பணத்தை அனுப்பும் நிலை உருவாகும்.
இதன் விளைவாக உலகளவில் பாதிக்கும் அதிகமாக வர்த்தகம் பிரிக்ஸ் நாடுகளின் உள்ளூர் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.
ஏற்கெனவே, டாலருக்கு மாற்று நாணயத்தை உருவாக்கினால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு எதிராக 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பிரிக்ஸ் நாடுகளின் பதில் தெளிவாக இருக்கிறது. நாங்கள் டாலருக்கு எதிரான நாணயத்தை விரும்பவில்லை, உள்ளூர் நாணயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதன்மூலம் பணப் பரிவர்த்தையை மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளன.
அதிபர் டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் டாலருக்கு மாற்றாக புதிய பணப் பரிவர்த்தனை முறை குறித்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
An end to the dollar? Will BRICS announce an alternative? What will Trump do?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.