காவிரி சில கேள்விகள், சில பதில்கள்...
காவிரி சில கேள்விகள், சில பதில்கள்...
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்னையில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டாளர்களில் ஒருவரான மகாதானபுரம் ராஜாராம், காவிரி நடுவர்மன்றம் தெளிவுபட கூறியுள்ள பகுதிகளை மீண்டும் சுட்டிக்காட்டி, தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது அல்லது ஏமாறுகிறது என்பதை விளக்கியுள்ளார். காவிரி பிரச்னையில் தமிழர்கள் ஆலோசிக்க வேண்டியவை என்று அவர் எழுப்பும் அந்தக் கேள்விகளுக்கு துறை சார்ந்தவர்களிடம் கருத்துகளைப் பெற்று பதிவு செய்துள்ளோம்.
காவிரி நீரைக் காப்பது நம் கடமை: மகாதானபுரம் ராஜாராம்
காவிரி பிரச்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கத்தின் இன்றைய செயல்தலைவர் என்ற முறையில் அரசு, விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்தறிய, சில கருத்துகளை முன்வைக்கிறேன்.
Advertisement
Advertisement
மைசூர் அரசு, காவிரியில் அணைகள் கட்டாத அந்தக் காலத்திலேயே, தமிழ்நாட்டின் காவிரி உரிமை நீரைத் தடுத்ததால் 1892, 1924 உடன்படிக்கைகள் ஏற்பட்டன. இரு மாநிலங்களும் கலந்துபேசி நீர் மேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஷரத்தை சுட்டிக்காட்டிய கர்நாடகம், 1974-ஆம் ஆண்டு, இனி நாங்கள் தண்ணீர் தந்தால் பெற்றுக்கொள்ளுங்கள்; உரிமை கொண்டாட முடியாது என்று வாதம் செய்தது. அத்துடன் தமிழ்நாட்டுக்கு குறுவை சாகுபடி மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டில் தண்ணீர் தருவதை நிறுத்திவிட்டது.
இரு மாநில முதல்வர்கள் பேசி, மத்திய அரசு சமரசம் பேசி முடிவு காண முடியாத நிலையில், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுகியது. காவிரி பிரச்னைக்கு நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரியது. காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கமும் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
1976-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் அரசில் அவசரநிலையின்போது விவசாயிகள் வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசு மற்றும் சிலர் தொடுத்த வழக்குகளும் இந்திரா காந்தியின் தலையீட்டால் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பிறகும், கர்நாடகம் தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விடவில்லை. தங்கள் அணைகளில் தேக்க முடியாத நீரை மட்டுமே திறந்துவிட்டார்கள். இப்போதும் அவ்வாறே செய்கிறார்கள். வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்து, ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கும் நிலையில், கர்நாடகம் தன்னால் தேக்கிவைக்க முடியாத உபரிநீரைத் திறந்துவிடும். இதுவே வழக்கமாகிவிட்டது.
மேட்டூர் அணையில் 93 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்க முடியும். சில ஆண்டுகளில், அதிக மழை இருப்பின், 200 அல்லது 300 டிஎம்சி தண்ணீரை மழைக் காலத்தில் கர்நாடகம் திறந்துவிட்டு தமிழகத்தின் சம்பாவுக்கு அழிவை ஏற்படுத்தும். குறுவை சாகுபடியின்போது தண்ணீர் இல்லாத நிலை, தாளடியில் வெள்ளம் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.
கர்நாடகம் கேஆர்எஸ் அணையுடன் மேலும் பல அணைகளை தமிழக அரசின் எதிர்ப்பு, மத்திய அரசின் மறுப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், மனிதாபிமானம் என எதையும் மதிக்காமல் கட்டியது. இப்போது மேக்கேதாட்டு அணை கட்டவிழைகிறது.
1983-ஆம் ஆண்டு, காவிரி பிரச்னைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி, தமிழக விவசாயிகள் மன்னார்குடி ரங்கநாதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு 20 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றம், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை விவசாயிகள் போட்டவழக்கு நிலுவையில் உள்ளதே, இதற்கு இந்திய அரசு பதில் சொல்லாவிட்டால், உச்சநீதிமன்றமே ஒரு தீர்ப்பு வழங்கும் என்று கூறியது.
அப்போது மத்திய அரசில் காங்கிரஸ் இல்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங், நடுவர் மன்றம் அமைப்போம் என்று உச்சநீதிமன்றத்திடம் உறுதி கூறினார். இந்த வழக்கில், தொடக்கம் முதலாகவே, கர்நாடகத்தின் வாதம் என்னவெனில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தர மாட்டோம் என்பதுதான்.
காலம் காலமாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் குறுவை சாகுபடி செய்து, நவம்பரில் அறுவடை முடித்து, தீபாவளியை மகிழ்வாக கொண்டாடி வந்த தமிழக விவசாயிகளின் வேண்டுகோளை கர்நாடகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
நடுவர்மன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு குறுவை சாகுபடிதான் உயிர், அவர்கள் சம்பா தாளடியை வடக்கிழக்குப் பருவமழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு செய்து கொள்ள முடியும் என்று கூறியது. தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரைத் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், 192 டிஎம்சி தண்ணீரை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்தது. ஜூன் மாதம் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி என குறுவைக்கு 134 டிஎம்சி தண்ணீரைத் தர வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. ஆகவே, குறுவைக்கு 134 டிஎம்சி, சம்பாவுக்கு 48 டிஎம்சி கோடைக் குடிநீருக்கு 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.
நடுவர் மன்றம் தனது தனித் தீர்ப்பில் மேலும் ஒரு விளக்கத்தையும் பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த ஆûணையில், சாதாரண ஆண்டு எனப்படுவது காவிரிப் படுகையில் மொத்தம் 740 டிஎம்சி தண்ணீர்கிடைக்கும் ஆண்டைக் குறிக்கும். தண்ணீர் ஆண்டு எனும் சொற்றொடர் ஜூன் 1-இல் தொடங்கி மே 31-இல் முடியும். பாசனப் பருவம் எனப்படுவது ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி நிறைவடையும் காலத்தைக் குறிக்கும்.
ஆகவே, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள 3+5 அணைகளில் ஜூனவரி 31-ஆம் தேதி இருக்கும் நீர் "குளோசிங் பேலன்ஸ்' நீராக இருக்கும். அதனுடன் கோடையில் சேரும் நீரையும் சேர்த்து ஜூன் 1-ஆம் தேதி அணைகளில் இருக்கும் நீரை "ஓபனிங் பேலன்ஸ்' ஆக காட்டி, மாதத்தின் அடிப்படையில் நீர் விநியோகம் இருக்க வேண்டும். இதை கர்நாடகம் ஏற்கவில்லை.
"நாங்கள் மே 31 வரை தண்ணீர்விடுவோம். ஓபனிங் பேலன்ஸ் கொடுக்க முடியாது' என்று கூறியது. மேலும், கர்நாடகம் தனது வாதத்தில் குறிப்பிடும்போது, தமிழ்நாடு ஜூனில் தண்ணீர் திறக்கும் வழக்கத்தை நிறுத்தி, மேட்டூருக்கு நீர் வந்த பிறகு விவசாயத்தை தொடங்க வேண்டும், குறுவையைக் கைவிட்டு, ஜனவரியில் மேட்டூரில் தண்ணீர் இருந்தால் கோடை சாகுபடி செய்யலாம்; இதுதான் காவிரி பிரச்னைக்கு தீர்வு. மேக்கேதாட்டில் 67 டிஎம்சி அணை கட்டுவது 4 டிஎம்சி குடிநீர் போக, 63 டிஎம்சியை தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு நீர் கொடுப்பதற்காகவே என்று கூறியது.
தொடர்ந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் கர்நாடகம் அநீதி இழைக்கிறது. 60 ஆண்டு கால போர்க்களம் இதுதான். மத்திய அரசோ அல்லது உச்சநீதிமன்றமோ தலையிடத் தயங்கும் விவகாரமாக இருக்கிறது. இரு மாநில அரசுகளும் ஓர் இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.
இன்றைய காவிரி பிரச்னையில் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்குத் தீர்வு என்ன?
1. மேக்கேதாட்டு அணையைக் கட்ட தமிழ்நாடு அரசு தடை விதிக்க முடியுமா? மேக்கேதாட்டை விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசு ராசிமணலில் அணை கட்ட முடியுமா?
2. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டாலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்குமா?
3. குறுவை சாகுபடியை நிலத்தடி நீர் மூலம் நடத்தவும், மேட்டூர் அணையில் போதுமான நீர் வந்த பிறகு டெல்டாவில் விவசாயம் தொடங்கவும் முடிவு செய்து மேட்டூர் அணை திறப்பை மாற்றி அமைக்க முடியுமா?
4. வடகிழக்குப் பருவமழையின் நீர் மற்றும் கர்நாடகம் திறக்கும் உபரிநீர் 200+200 =400 டிஎம்சி தமிழ்நாடு சேமித்து, பயன்படுத்துமா?
5. டெல்டாவில் நெல் சாகுபடியை 50 சதவீதம் குறைத்துக்கொண்டு, நீர்த்தேவை குறைவாக உள்ள மாற்றுப் பயிர்களைக் கொண்டுவர முடியாதா? இன்றைய தலைமுறையினர் ஆலோசிக்கவும், கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கவும் வேண்டிய தருணம் இது. காவிரி நீரைக் காப்பது நம் கடமை.
ராசிமணல் அணை சாத்தியமா? சௌமியா அன்புமணி சட்டப்பேரவை உறுப்பினர் (பாமக)
இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளாக இருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையே ஓடும் நதிகளாக இருந்தாலும் அதன் மீது கடைமடை பாசனப் பகுதிக்குத்தான் அதிக உரிமை உள்ளது என்பதை பன்னாட்டு நீதிமன்றங்களும், இந்திய உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கின்றன.
காவிரியின் குறுக்கே புதிதாக எந்தக் கட்டுமானங்களைக் கட்டுவதாக இருந்தாலும் தமிழகம், புதுச்சேரி ஆகிய கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அவற்றின் தீர்ப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளன.
மேக்கேதாட்டு அணையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து அடுக்கடுக்காக ஏராளமான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் நாம் தொடர வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப் பகுதி நீர்த்தேக்கப் பகுதியாக மாற்றப்பட்டு, 12,500 ஏக்கர் பரப்பளவிலான காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்; பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும். மேலும், நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும்.
மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு 67 டிஎம்சி எனக் கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப் பகுதி அதிகமாக இருப்பதால் 70 டிஎம்சி-க்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட வராது. அதனால் காவிரிப் பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகிவிடும். 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும்.
ராசிமணல் பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் அளவிடப்படும் பிலிகுண்டுலுவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரைத் தேக்கிவைக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த இடம் அணை கட்டச் சாத்தியமான பகுதியாகும். அதனால்தான் ராசிமணல் அணை கட்ட 1961-இல் காமராஜர் அடிக்கல் நாட்டினார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தன.
ராசிமணல் பகுதியில் காவிரியின் இடதுகரை தமிழகத்துக்கும், வலதுகரை கர்நாடகத்துக்கும் சொந்தமானது. அந்த இடத்தில் இருபுறமும் மலைகள் இருப்பதால், ஏறக்குறைய 66 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும். ராசிமணல் பகுதியில் அணை கட்டப்பட்டால் அங்கிருந்து மேல் நோக்கி 42 கி.மீ. மேக்கேதாட்டு வரையிலும், வடக்கே 25 கி.மீ. தூரம் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாகத் தண்ணீர் சேமிப்புப் பகுதிகளாகத் தேக்கிவைக்க முடியும்.
மேக்கேதாட்டு அணையுடன் ஒப்பிடும்போது இதற்கு குறைந்த செலவே ஆகும். இங்கு புனல் மின்நிலையம் அமைந்தால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ராசிமணல் அணையிலிருந்து பெங்களூருக்கு குடிநீர் கொண்டு செல்லலாம். பிலிகுண்டுலு பகுதியில்தான் தமிழகத்துக்கான காவிரி நீர் கணக்கிடப்படும். இதனால் கர்நாடகத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது. கர்நாடகம் மிகை நீரை அளித்தால் அதை ராசிமணலில் நாம் சேமிக்க முடியும்.
சேமித்து வைக்க முடியாது: துரைபாண்டியன், பொதுப் பணி துறை முன்னாள் அதிகாரி
மிக முக்கியமான கேள்வி. 200+200=400 டிஎம்சி சேமிக்க முடியுமா என்றால் இப்போதுள்ள சூழ்நிலையில் நிச்சயமாக தேக்கி வைக்க முடியாது. - இதுதான் தமிழ்நாட்டின் நீர் பிரச்னையின் உச்சம்!
தமிழ்நாட்டின் மொத்த நீர்த்தேக்க திறன் வெறும் 224 டிஎம்சி தான்! சிறியதும் பெரியதுமாக உள்ள 90 அணைகள் சேர்ந்து 224.297 டிஎம்சி டிஎம்சி மட்டுமே சேமிக்க முடியும்.
மேட்டூர் அணையின் திறன் 93.47 டிஎம்சி மட்டுமே. ஆனால், கடந்த 2022-23இல் கர்நாடகம் 177 டிஎம்சிக்கு பதில் 667.67 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது. அதில் 60% - அதாவது 400 டிஎம்சி தண்ணீர் நேராக கடலுக்கு போய்விட்டது.
ஏன் சேமிக்க முடியவில்லை? மேட்டூர் அணை நிரம்பியதும் தண்ணீரைத் தேக்கி வைக்க வேறு இடம் இல்லை: எல்லா ஏரி, குளங்களும் நிரம்பிவிட்டன. 990 ஏரிகள் பராமரிப்பு இல்லை: காவிரிப் படுகையில் உள்ள 990 ஏரிகளையும் சரி செய்தால்தான் தண்ணீரைப் பிடித்து சேமிக்க முடியும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இப்போதைய நிலை மோசம்: இந்த ஆண்டு (2026) ஜூன் மாதம் மேட்டூர் அணையில் வெறும் 41.72 டிஎம்சி தண்ணீர்தான் இருந்தது, கடந்த ஆண்டு 82.32 டிஎம்சி இருந்தது. இப்போதைய கட்டமைப்பில் 400 டிஎம்சி மிகை நீரைச் சேமிக்க முடியாது.
தீர்வுக்கு அரசு செய்ய வேண்டியது: தடுப்பணைகள் நிறைய கட்ட வேண்டும். காவிரி - அக்னியாறு - தென் வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் இதற்கு ஒரு தீர்வாக அமைய உதவும். ஏரி, குளங்கள் அனைத்தையும் தூர்வாருவதுடன், காவிரி சார்ந்துள்ள அனைத்து ஏரி, குளங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருப்பதாகச் செய்ய வேண்டும்.
100 அடி தாண்டிய பின்னர்தான் திறக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் கடந்த செப். 1-ஆம் தேதி முதல்வர் ச.ஜோசப் விஜய் தண்ணீரைத் திறந்து வைத்தார். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, தொடர்ந்து 45 நாள்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
இதன்மூலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 17.10 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இச்சூழலில், மேட்டூர் அணையில் தற்போது போதுமான நீர் இருப்பு இல்லை . நீர்மட்டம் 100 அடியைத் தாண்டிய பின்னர் பாசனத்துக்காக அணையைத் திறந்துவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக காவிரி டெல்டா விவசாயிகளை அழைத்து, வேளாண்மைத் துறை, நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் நடத்தும் கருத்துக்கேட்பு கூட்டங்களின் அடிப்படையிலேயே தண்ணீர் திறப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் தமிழக அரசு தன்னிச்சையாக மேட்டூர் அணையைத் திறந்துள்ளது.
மேட்டூர் அணையில் 100 அடி நீர்மட்டம் இருக்கும்போது அணையைத் திறக்க வேண்டும். அப்போதுதான் பாசனப் பகுதிகளுக்குத் தேவையான அளவு தண்ணீரைத் தொடர்ந்து வழங்க முடியும். அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் தண்ணீர் திறப்பது விவசாயிகளுக்குப் பயன் தராது.
வழக்கமாக, தண்ணீர் திறக்கப்பட்டு 2 அல்லது 3 நாள்களில் தண்ணீர் கடைமடையைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து ஒரு வாரம் ஆகியும் தண்ணீர் கடைமடையை எட்டவில்லை. அதேபோல், நிகழாண்டு "எல் நினோ' தாக்கத்தால் தென்மேற்குப் பருவமழை குறைந்துள்ளது. இந்த நிலையில், 45 நாள்கள் மட்டும் தண்ணீர் திறப்பதால் விவசாயிகளுக்குப் பயனில்லை. எனவே, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் வரை காத்திருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அப்போதுதான் பருவமழை தொடங்கும் வரை பாசனத்துக்குத் தண்ணீரைத் தொடர்ந்து வழங்க முடியும்.
நெல் சாகுபடியில் மூன்று போகம் கூடாது.. பி.எஸ். மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர்
காவிரி பாசனம் குறைந்த நிலையில்தான் காவிரிக்கு வேற்றுப் பயிர்களான மாற்று பயிர்கள் வரத் தொடங்கியது. பசுமைப் புரட்சி வந்தபின், அரசே பணப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கத் திட்டங்களை அறிவித்தது. பருத்தி, மிளகாய், பயறு வகைகள் எனப் பல வந்தன. ஆனாலும் அது நீடிக்கவில்லை . காரணம் டெல்டாவின் மண் வகை பெரும்பகுதி நீர் சேர்ந்தால் இளகும், வற்றினால் இறுகும். டெல்டா என்பது நெல் சாகுபடிக்கே அதிகம் சாதகமாக உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் சென்று அதன் தலைவர் ஹல்தரிடம் பேசும்போதுகூட, டெல்டாவுக்கு பழைய மாதிரி நீர் வரும் என எதிர்பார்க்காதீர்கள். தீர்ப்பின்படி உங்களுக்கு முன்று போகத்துக்கு அனுமதி கிடையாது. ஆகவே, மாற்றுப் பயிர்களுக்குச் செல்லுங்கள் எனக் கூறினார். நாங்கள் மத்திய அரசு மூலம் உரிய தொழில்நுட்பங்களையும் பயிற்சிகளையும் தருகிறோம் என்று கூறினார்.
மாற்றுப் பயிர்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், காவிரியின் இடர்ப்பாடு, பருவமழையின் தட்டுப்பாடு நிலைகளால் மாற்றுப் பயிர்களை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இருபோகம் நெல் சாகுபடி அவசியம். எஞ்சிய காலங்களில் மாற்றுப் பயிர்களை திட்டமிடலாம். நீண்டகாலப் பயிர்களான கரும்பு, தென்னை, பனை எண்ணெய், எலுமிச்சையும், கோடைக் காலங்களில் குறுகிய காலப் பயிர்களான பருத்தி, எள், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயா பீன்ஸ், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்யலாம். ஆனால், இவற்றுக்காக டெல்டாவுக்கு என்று சிறப்பு வேளாண் திட்டங்கள், சிறப்புத் திட்ட ஊக்க நிதி ஒதுக்கீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்க தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
டெல்டாவின் கீழ்ப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் எரிவாயு, எரி எண்ணெய் கணக்கின்றி வெளியேற்றப்பட்டு வெற்றிடம் உருவான நிலையில், வங்கக் கடலின் உப்புநீர் உள்ளே புகுந்துவிட்டது. டெல்டாவின் மேல்பகுதியில் ஆபத்தான நிலையில் நிலத்தடி நீர்மட்டம் கீழே போய்க் கொண்டிருக்கிறது. எனவே, முப்போகம் நெல் சாகுபடியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நதியை தேசியமயமாக்குவதே தீர்வு: ஈசன் முருகசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்குரைஞர்
தமிழகத்துக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் போதுமான தண்ணீர் கிடைக்காததற்கு அண்டை மாநிலங்களில் பருவமழைக் குறைவு என்பதைவிட அந்த மாநிலங்களுடனான நதிநீர்ப் பகிர்வில் உள்ள பிரச்னைகள்தான் முக்கியக் காரணம். கர்நாடக மாநிலத்தில் போதிய மழை இல்லாத காலங்களில் அல்லது சாதாரண காலங்களில்கூட நமக்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய தண்ணீரை அவர்கள் முறைப்படி திறந்துவிடுவதில்லை.
ஒருபுறம் அணைகளில் தண்ணீரே இல்லை என அந்த மாநில முதல்வர் கூறுகிறார்; ஆனால், சில நாள்களில் அங்குள்ள அணைகள் பலத்த மழையால் நிரம்பி, அதற்குமேல் நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்படும்போது வெளியேற்றப்படும் உபரிநீர் வேறு வழியில்லாமல் திறந்துவிடப்படுகிறது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. ஒப்பந்தப்படி நமக்கு உரிமை நீர்தான் வேண்டுமே தவிர; உபரிநீர் அல்ல.
மேக்கேதாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு பெரிதும் குறையும். இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். டெல்டா பகுதி கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.
மேலும், அணை கட்டப்பட்டால் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. கர்நாடக அரசு கட்டும் அணையால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை; மாறாக அடுக்கடுக்கான இழப்புகளை தமிழகம் சந்திக்க நேரிடும்.
ஓர் ஆணையத்தின் உத்தரவை மாநிலங்கள் அமல்படுத்த மறுக்கின்றன என்றால், அந்த மாநிலங்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இது குறித்த சிறப்பு ஷரத்துகளை சட்டத்தில் கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
மாநிலங்களில் உள்ள நீர்வளங்களை தேசியமயமாக்குவதன் மூலம் நதிநீர்ப் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். ஆணையத்தின் உத்தரவை மதிக்காவிட்டால் எதுபோன்ற தண்டனைகளுக்கு மாநிலங்கள் உள்ளாக நேரிடும் என்பது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால், அனைத்து மாநிலங்களிலும் நதிநீர்ப் பகிர்வில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.