FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கண்காணிப்பில் சாலைகள்!

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் குறித்த தலையங்கம்....

10 செப்டம்பர் 2026, 4:46 am IST
சாலைகள். - கோப்புப்படம்.
பகிர்:

இந்தியாவில் சாலை விபத்துகள் பெரும் பிரச்னையாக தொடர்கிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக தகவலின்படி, நிகழாண்டு ஜூலை மாதம் வரை நாட்டில் 2.96 லட்சம் சாலை விபத்துகளும், அவற்றால் 1.01 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இவற்றில் அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியது. நிகழாண்டு ஜூலை மாதம் வரை தமிழகத்தில் 39,666 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன; 34,847 விபத்துகளுடன் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேநேரத்தில், சாலை விபத்து மரணங்கள் பட்டியலில் 14,794 மரணங்களுடன் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது என்றால், 10,298 உயிரிழப்புகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. சாலை விபத்துகளில் பெரும்பாலானவை விரைவுச் சாலைகளை உள்ளடக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், உத்தர பிரதேசம் 7,575 விபத்துகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 3,520 விபத்துகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

Advertisement

Advertisement

பதிவான மொத்த விபத்துகளில் சுமார் 15.54 சதவீத விபத்துகளுக்கு அதிவேகமே முதன்மையான போக்குவரத்து விதிமீறலாக உள்ளது. ஓட்டுநரின் கவனச் சிதறல் மற்றும் சாலையின் தன்மையும் பிற காரணங்களாக இருந்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் பதிவான 100 சாலை விபத்துகளில் சுமார் 35 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது நிகழாண்டு ஜூலை வரையிலான தரவுகளின்படி 34 உயிரிழப்புகளாக உள்ளது.

இந்தியாவில் சராசரியாக தினமும் 480 நபர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் ஓர் உயிர் என்ற விகிதத்தில் விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. நெடுஞ்சாலைகளைத் தொடர்ந்து, நகரங்களிலும் சாலை விபத்து உயிரிழப்புகளும், காயங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் 40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியே கண்காணிப்பது என்பது இயலாத காரியம். வேக வரம்பு, தலைக் கவச சட்டம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம், இருக்கை பட்டை அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவற்றை அமல்படுத்துவதில்தான் பல சவால்கள் நிலவுகின்றன.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் துணை நாடப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறியும் தானியங்கி கேமராக்களை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் போக்குவரத்துக் காவலர்கள் இல்லாமல் கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிவேகம், சிவப்பு விளக்குகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தைச் செலுத்துதல் போன்றவற்றை தானாகவே கண்டறிந்து விதிமீறலை ஆதாரமாகப் பயன்படுத்தும் விதத்தில் காணொலிப் பதிவாகவும் இந்த ஏ.ஐ. கேமராக்கள் செயல்பட முடியும்.

இது போன்ற கேமராக்கள் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விதிகளை மீறும் வாகனங்களை சான்றுகளுடன் படம் பிடித்து அவற்றின் உரிமையாளர்களின் அறிதிறன்பேசிக்கு இ-சலான்களாக அவை அனுப்புகின்றன.

இந்த நடைமுறைக்கு தற்போது கைமேல் பலனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது. நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் விதிமீறும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதால், போக்குவரத்து விதிகளை மதிக்கும் போக்கு வாகன ஓட்டிகளிடம் அதிகரித்து வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த போக்குவரத்து கண்காணிப்பு முறைகள் சோதனை அடிப்படையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ளன. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமுறை மீறல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த கேமராக்களை அதிக அளவில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, சாலை விபத்து உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வாகனங்களின் நிகழ்கால இயக்கம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை உள்ளது. இதன்மூலம் வாகனங்களின் பெர்மிட், காப்பீடு, சுற்றுச்சூழல் சான்றிதழ் போன்றவற்றையும் தானியங்கி முறையில் அறிந்து கொண்டு, அவை காலாவதியான நிலையில் அவற்றையும் கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏ.ஐ. சார்ந்த தொழில்நுட்பம் மட்டுமே சாலை விபத்துகள் பிரச்னைக்கு தீர்வாகி விடும் என்றும் கருத முடியாது. முறையான நடைபாதைகள், நன்கு வடிவமைக்கப்பட்ட சந்திப்புகள், சாலைத் தடுப்புகள் உள்ளிட்ட சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அவசியம்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது

ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்.

மற்றவை எல்லாம் வேறானவை.

திருக்குறள் (எண் 661) அதிகாரம்: வினைத்திட்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments