FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாதனைகள் தொடர வேண்டும்!

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடவர், மகளிர் என இரு அணியினரும் சாம்பியன், பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சாம்பியன், மகளிர் டி20 ஆசிய கோப்பை சாம்பியன், வில்வித்தையில் இந்திய வீரர் சாம்பியன் என அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

19 செப்டம்பர் 2026, 6:14 am IST
இந்திய மகளிர் அணி
பகிர்:

கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டுகளைத் தொடர்ந்து அண்மைக்காலமாக ஹாக்கி, பாட்மின்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை புரிந்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில் கடந்த வாரம் இந்தியாவுக்கு பொன்னான வாரம் என்றே கூறலாம். ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடவர், மகளிர் என இரு அணியினரும் சாம்பியன், பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சாம்பியன், மகளிர் டி20 ஆசிய கோப்பை சாம்பியன், வில்வித்தையில் இந்திய வீரர் சாம்பியன் என அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

துபையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் 8-ஆவது முறையாக சாம்பியன் ஆயினர். இதற்கு முன்னர், 2004, 2005, 2006, 2008, 2012, 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்திய மகளிர் வாகை சூடி உள்ளனர்.

சீனாவின் செங்டு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்ற ஆசிய ஜூனியர் பாட்மின்டன் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் 15 வயதான இந்திய வீராங்கனை தன்வி பத்ரி பட்டம் வென்றார்.

Advertisement

Advertisement

தொன்றுதொட்டு போர்க் களத்தில் வில்லால் அம்பு எய்வதில் இந்தியா தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதை ஒரு விளையாட்டாக்கி நாம் தேர்ச்சி பெறவில்லை. உலகக் கோப்பை போட்டியில் ஆடவர் ரீகர்வ் பிரிவில் தங்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ஸ்காட்லாந்தில் 2010-இல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஜெயந்த் தலுக்தார் வெண்கலப் பதக்கம் வென்றதே ஆடவர் ரீகர்வ் பிரிவில் அதிகபட்ச சாதனையாகும். துபையில் கடந்த 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மகளிர் பிரிவில் டோலா பானர்ஜி தங்கம் வென்றிருந்ததே இந்தியரின் ஒரே தங்கப் பதக்கமாக இருந்துவந்தது.

அந்தக் குறையை இந்தியாவின் தீரஜ் போக்கி இருக்கிறார். மெக்ஸிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுற்ற உலகக் கோப்பை போட்டியில் ரீகர்வ் பிரிவில் கடுமையாகப் போராடி ஜப்பானின் நகாநிஷியை வீழ்த்தி தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் என்ற சாதனையை தீரஜ் படைத்துள்ளார்.

ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை போட்டிகள் சீனாவின் மோகி நகரில் கடந்த செப். 4-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், சீன தைபே, ஜப்பான், கஜகஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஆடவர் பிரிவில் இந்தோனேசியா,

மகளிர் பிரிவில் ஹாங்காங் என 10 அணிகள் பங்கேற்றன. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவையும் (4-1), மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனாவையும் (1-0) இந்திய அணிகள் வென்று சாம்பியன் ஆயின. ஆடவர் பிரிவில் 46 கோல்கள் அடித்த நமது வீரர்கள் எதிரணிகளுக்கு வெறும் 8 கோல்களையும், மகளிர் பிரிவில் 47 கோல்கள் அடித்த நமது வீராங்கனைகள் எதிரணிகளுக்கு வெறும் 3 கோல்களையும் மட்டுமே விட்டுக் கொடுத்தனர் என்பதில் இருந்தே போட்டி முழுவதும் எப்படி ஆதிக்கம் செலுத்தினர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மகளிர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 19-0 என நமது மகளிர் பந்தாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு ஜப்பான் மட்டுமே சற்று சவால் அளித்து 3-3 என டிரா செய்தது. மகளிர் பிரிவில் சீனா மட்டுமே இந்தியாவுக்கு சவாலாக விளங்கியது. லீக் சுற்றில் சீனாவுக்கு எதிராக 0-0 என டிரா செய்த மகளிர் இறுதி ஆட்டத்தில் 1-0 என வென்றனர். ஆடவர் பிரிவில் 2004, 2008, 2015, 2023, 2024 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து தற்போது 6-ஆவது முறையாகவும், மகளிர் பிரிவில் 2023, 2024, 2026 என தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இந்தியா பட்டம் வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளில் 1980 வரை 8 தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி அதன் பிறகு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. அதிலிருந்து நாம் இன்னும் மீண்டு சர்வதேச அரங்கில் நமது ஆதிக்கத்தை ஹாக்கியில் நிலைநாட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

பெல்ஜியம் - நெதர்லாந்தில் கடந்த ஆக. 15 முதல் 30 வரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் 16 அணிகள் பங்கேற்றன. ஆசிய அளவில் ஜூனியர், சீனியர் என பல்வேறு போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சாம்பியன் ஆனபோதிலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா 8-ஆவது இடத்தையும்

மகளிர் பிரிவில் 5-ஆவது இடத்தையும் பிடித்தது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியர்கள் வெற்றிக் கொடியை நாட்டினாலும், தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டிகளில் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வென்றாலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை மீட்பதுதான் அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாகத் தொடர்கிறது.

கடந்த 2020-இல் டோக்கியோ, 2024-இல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் இந்திய ஆடவர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வதற்கேற்ப திட்டமிடுவதும், தயாராவதும் அவசியம்.

நாம் இழந்துவிட்ட பெருமையை மீட்டெடுத்து தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களமிறங்குவோம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதி யுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

திருக்குறள் (எண் 666) அதிகாரம்: வினைத்திட்பம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments