11.9.1976: இந்திய விமானம் லாகூருக்கு கடத்தல்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, செப். 10 - டில்லியிலிருந்து பம்பாய்க்கு சென்றுகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் - போயிங் 739 - இன்று லாகூருக்குக் கடத்தப்பட்டது. 10 மணி நேரத்துக்குப் பின்னர் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரக சீனியர் அதிகாரி ஒருவரும் பாகிஸ்தான் அதிகாரிகளும் லாகூர் விமான நிலையத்தில் விமானத்தைக் கடத்தியவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
விமானத்தை கடத்திய நபர்களுடன் நடத்தும் பேச்சுக்களில் பங்கு கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதம மந்திரி பூட்டோவே லாகூருக்குப் புறப்பட்டதாக இஸ்லாமாபாத்திலிருந்து வந்த ஏஎப்பி தகவல் கூறியது. ஆனால் இத் தகவல் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை.
விமானத்தைக் கடத்திய ஆசாமிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னமும் தெரியவில்லை. விமானத்தில் 79 பிரயாணிகளும், 7 சிப்பந்திகளும் இருந்தனர். அவர்களில் 6 பேர் விடுவிக்கப்பட்டனர். மூவர் ஜெர்மானியர்கள். மூவர் இந்தியர்கள். அவர்களில் சிலர் நோயுற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. விடுவிக்கப்பட்ட இந்தியர்களான ஒய்.ஜி. மன்சுகானி, திருமதி மன்சுகானி, எஸ்.கே. ராய் ஆகிய மூவரும் இந்தியாவுக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
காலை 8-39க்கு விமானம் லாகூரில் இறங்கியதாகப் பின்னர் தகவல் கிடைத்தது. விமானத்தை கடத்தியவர்களின் உள்நோக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை.
பிரயாணிகள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களை தேவையானால் திரும்ப அழைத்துவர டில்லி விமானமொன்றை இந்தியன் ஏர் லைன்ஸ் தயாராக வைத்துள்ளது.
இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் விமானத்தைக் கடத்திய நபர்களுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு லாகூர் வந்து சேர்ந்தார். ஆலோசனை நடத்த டில்லி வந்த இந்திய தூதர் எஸ். பாஜ்பாய் இத்தகவல் கிடைத்தவுடன் லாகூர் செல்லும் மார்க்கமாக அமிர்தசரஸிற்குப் புறப்பட்டார். கார் மூலம் அவர் லாகூர் செல்வார்.
பிரயாணிகளில் இரு குழந்தைகளும், 26 வெளி நாட்டினரும் உள்ளனர். ராஜஸ்தான் ஸ்தல ஸ்தாபன மந்திரி குலாப்சிங்ஷகா தாவத்தனும் விமானத்தில் இருந்த பிரயாணியாவார். அவர் டில்லியிலிருந்து ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகளனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும், அவர்களுக்கு மதிய உணவும், தேனீரும் வழங்கப்பட்டதாக ஏர்லைன்ஸ் வட்டாரம் பின்னர் கூறியது. ...
நடு வானில் இரு விமானங்கள் மோதி 176 பேர் சாவு
பெல்கிரேட், செப். 10 - யூகோஸ்லாவிய நாட்டின் விமானமும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் நடுவானில் மோதிக்கொண்டன. இதன் விளைவாக குறைந்தபட்சம் 176 பேர் உயிரிழந்தார்கள்.
ஜாக்ரப் அருகே இன்று இந்த விபத்து நடந்ததது. இரு விமானங்களிலும் சென்றவர்களில் எவரும் பிழைக்கவில்லை என்று ஜாக்ரப் ரேடியோ கூறியது.
யூகோஸ்லாவிய விமானத்தில் 106 பிரயாணிகள் இருந்தார்கள். பிரிட்டிஷ் விமானத்தில் 63 பேர் இருந்தார்கள்.
யூகோஸ்லாவியாவின் விமானம் யூகோஸ்லாவியாவில் உள்ள ஸ்பிளிட் என்ற இடத்திலிருந்து மேற்கு ஜெர்மனியில் உள்ள கோலோன் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் லண்டனிலிருந்து இஸ்தான்பூலுக்குச் சென்று கொண்டிருந்தது.
Indian plane hijacked to Lahore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.