FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடு கடத்தக் கோரி இந்தியா தொடுத்த வழக்கு: மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை (61) இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென்று லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில்

Updated On : 14 ஜூன் 2017, 4:56 am IST
பகிர்:

தொழிலதிபர் விஜய் மல்லையாவை (61) இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென்று லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு நீதிமன்றம் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாக மல்லையா கூறியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளி: பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்தியா தொடுத்த வழக்கு: அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 18-இல், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் சரணடைந்த மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் அளித்துவிட வேண்டுமென்று மல்லையாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
மீண்டும் ஜாமீன்: இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் மல்லையா நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து, அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் இந்திய அதிகாரிகள் சார்பில் பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குழு நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது. முன்னதாக, இந்தியாவில் இருந்து சென்ற சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, பிரிட்டன் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குழுவுடன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியது.
நியாயத்தை நிரூபிப்பேன்-மல்லையா: நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் மல்லையா கூறியதாவது:
என் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கிறேன். நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்ப வேண்டுமென்று நினைக்கவில்லை. நீதிமன்றத்தில் எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் எதைக் கூறினாலும், அதனை திரித்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவேதான், ஊடகங்களிடம் நான் எதையும் கூறுவது இல்லை. என்னிடம் உள்ள ஆதாரங்கள் நீதிமன்றத்தில் பேசும்.
இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில்தான் பிரிட்டனில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளுக்குச் சென்றேன். ஆனால், அதையும் ஊடகங்கள் மோசமான செய்தியாக வெளியிடுகின்றன என்றார் அவர்.
'திருடன்' கோஷம்: முன்னதாக, கடந்த வாரம் இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியை பார்க்க லண்டன் ஓவல் மைதானத்துக்கு மல்லையா வந்தார். அப்போது, இந்திய ரசிகர்கள் அவரை நோக்கி 'திருடன், திருடன்' என்று கோஷமிட்டனர். அதற்கு முன்பு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை விஐபி-க்கள் வரிசையில் அமர்ந்து மல்லையா பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள வழக்குகள்: கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் பெற்ற ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமன்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments