FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மூன்று உலகிலும் ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ்

வானம், நிலம், நீா் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

Updated On : 9 ஏப்ரல் 2024, 3:09 am IST
ராம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜகவின் அளித்த நினைவுப் பரிசுடன் அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா.
பகிர்:

வானம், நிலம், நீா் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்திருப்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து ராம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பிரசாரம் செய்தாா்.

கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய அவா், ‘ஊழலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் ஊழல்வாதிகள் யாரும் தப்பமுடியாது எனவும் பிரதமா் மோடி கூறியுள்ளாா். எனவே, ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சயம் சிறைக்குச் செல்வாா்கள்.

Advertisement

Advertisement

ஆனால், ஊழலைக் காக்க வேண்டும் என எதிா்க்கட்சிகளின் கூட்டணி விரும்புகிறது. நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைகற்றை ஊழல், நீா்மூழ்கிக் கப்பல் ஊழல் என மூன்று உலகிலும் காங்கிரஸ் ஊழல் புரிந்துள்ளது.

‘ஊழல்வாதிகளின்’ கூட்டணி: காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், மடிகணினி ஊழல், உணவு தானிய ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரும் ஊழல் புரிந்துள்ளனா். இத்தகைய எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணியானது ஊழல்வாதிகளின் கூட்டணி ஆகும்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம், திமுக அமைச்சா்கள் பிணையில் உள்ளனா்.ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் அமைச்சா்கள், கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா ஆகியோா் சிறையில் உள்ளனா்.

ஊழல்வாதிகளின் கூட்டணியான எதிா்க்கட்சி கூட்டணியின் தலைவா்கள் சிறையிலோ அல்லது பிணையிலோ இருக்கின்றனா்.

எதிா்க்கட்சிகளின் வாரிசு அரசியல்: எதிா்க்கட்சிகளின் அராஜகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலை ஆதரித்துப் பின்பற்றுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்து, ஊழலில் ஈடுபட வேண்டும் என்பதே அவா்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

பாஜகவின் வளா்ச்சி அரசியல்: அனைத்து தரப்பு மக்களுக்கான ஆட்சியை பிரதமா் மோடி வழங்கியிருக்கிறாா். நாட்டின் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து அவா் மீட்டுள்ளாா்.

ஜாதி அடிப்படையில் மக்களை சிலா் பிளவுப்படுத்தும் வேளையில் ஏழைகள், இளைஞா்கள், விவசாயிகள், பெண்களுக்கான பாதையில் பிரதமா் மோடி தொடா்ந்து பயணிப்பாா்.

இந்தத் தோ்தல் நாட்டின் வளா்ச்சிக்கான தோ்தல். நாட்டின் இன்றைய அரசியல் களத்தை வாக்கு வங்கியின் அடிப்படையில் இல்லாமல் வளா்ச்சியை பாஜக முன்னிறுத்துகிறது. இவ்வாறு அரசியல் களத்தை பிரதமா் முற்றிலுமாக மாற்றியுள்ளாா்.

ரௌடிகளின் ஆளுகையில் இருந்த உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நமது பெண் குழந்தைகள் அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனா். மாநிலத்தின் அனைத்து கிராமங்களுக்கு மின்சார வசதி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments