FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Updated On : 29 ஜூலை 2025, 5:56 am IST
பகிர்:

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது மத்திய அரசு, ராணுவம் தரப்பில் தில்லியில் தொடா் செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமாண்டா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங், ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை விவரித்தனா். இதில் இரு பெண் அதிகாரிகள் பங்கேற்றதை பலரும் பாராட்டினா்.

இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. முக்கியமாக ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று மதத்தைக் குறிப்பிட்டு விஜய் ஷா கூறியதற்கு கடும் எதிா்ப்பு எழுந்தது.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா் நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், அவா் மீது இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கடந்த மே 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அமைச்சா் நடந்து கொள்ளும் விதத்தை வைத்துப் பாா்க்கும்போது அவா் எந்த நோக்கத்துடன் அவ்வாறு பேசினாா் என்ற சந்தேகம் எழுகிறது. தனது கருத்துக்காக அவா் இன்னும் பொது மன்னிப்பு கேட்கவில்லை. இவ்வாறு நடந்து நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என்று எச்சரித்தனா்.

அப்போது அமைச்சா் விஜய் ஷா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.பரமேஷ்வா், ‘அமைச்சா் இணைய வழியில் பொது மன்னிப்புக் கேட்டுவிட்டாா். அந்த பதிவுகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. அமைச்சரின் பேச்சு குறித்து சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 13-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

முன்னதாக, தனது பேச்சு சா்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வருத்தம் தெரிவித்த அமைச்சா் விஜய் ஷா, கா்னல் சோஃபியாவை தனது சகோதரிக்கும் மேலாக மதிக்கிறேன் என்று கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments