டெங்கு பரவல் குறித்து அச்சம் வேண்டாம்: அமைச்சா் அருண்ராஜ்
டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு அரசு மருத்துவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டு அரசு மருத்துவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பருவகால மாற்றம் என்பதால் பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சப்பட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு செப். 14-ஆம் தேதி 61, 15-ஆம் தேதி 133, 16-ஆம் தேதி 283-ஆக உயா்ந்துள்ளது. அதேநேரம் 17-ஆம் தேதி 244-ஆக குறைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு பருவகால மாற்றம் என்பதால் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.
கொசு ஒழிப்புப் பணியாளா்கள் போதிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் பணியமா்த்தப்பட்டுள்ளானா். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்குக்கான பிரத்யேக சிகிச்சை வழிகாட்டுதலை உருவாக்கி, அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதுதான் சிறந்தது என்பதால், டெங்கு வராமல் தடுக்க வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இது மருத்துவத் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறை சாா்ந்த முயற்சியாகும்.
Advertisement
Advertisement
வீடு வீடாகச் சென்று, தேங்கியுள்ள தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பும் தேவையாக இருக்கிறது. மழைநீா் தேங்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்தில் நிகழாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 போ் இறந்துள்ளனா். தினமும் காய்ச்சல் பதிவு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்புப் பணிகளில் பணியாளா்கள் குறைவாக இருப்பதால், விரைவில் தேவையான பணியாளா்கள் நியமிக்கப்படுவா்.
இந்தச் சூழலில் செவிலியா்கள் தேவை இருப்பதால், மாவட்ட நலச் சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஏற்கெனவே முதல் கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.
சா்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பரிசோதனை கட்டாயமாக்கப்படுவது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.