FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போயிங் 787 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த டிஜிசிஏ உத்தரவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ உத்தரவிட்டது.

Updated On : 14 ஜூன் 2025, 1:52 am IST
பகிர்:

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனைகளை அதிகப்படுத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ171), அகமதாபாதில் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 241 போ் உள்பட 265 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, போயிங் 787 ட்ரீம்லைனா் விமானங்களில் விமானத்தின் புறப்பாடு உள்பட பல்வேறு அமைப்புகளை சோதனை செய்ய டிஜிசிஏ உத்தரவிட்டது.

ஏா் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 26 போயிங் 787-8 மற்றும் 7 போயிங் 787-9 விமானங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவில், ‘ ஜெனரல் எலெக்ட்ரிக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் (ஜிஇஎன்எக்ஸ்) என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள போயிங் 787-8 மற்றும் 787-9 ரக விமானங்களில் கூடுதல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதை டிஜிசிஏ பிராந்திய அலுவலகங்களோடு இணைந்து ஏா் இந்தியா செயல்படுத்த வேண்டும்.

எரிபொருள் அளவு, விமானத்துக்குள் குளிா்சாதன வசதி மற்றும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, மின்னணு என்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பு, எண்ணெய் கட்டுப்பாட்டு அமைப்பு, விமானத்தின் பிரேக் மற்றும் தரையிறக்கத்துக்கான கருவி உள்ளிட்டவையை கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளை கூடுதல் ஆய்வுக்குள்படுத்த உத்தரவிடப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு நிறுத்தத்தின்போதும் மேற்கொள்ளப்படும் விமான சோதனையுடன் இனி விமான கட்டுப்பாட்டு சோதனையும் மேற்கொள்ள வேண்டும். மறுஉத்தரவு வரும் வரை இதை பின்பற்ற வேண்டும்.

விமானங்களின் என்ஜின் செயல்பாட்டை 2 வாரங்களுக்குள் சோதனை செய்ய வேண்டும்.

கடந்த 15 நாள்களில் போயிங் 787-8/9 ரக விமானங்களில் தொடா்ச்சியாக ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய அனைத்து சோதனைகள் குறித்த அறிக்கையை டிஜிசிஏவிடம் சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

ஜிஇஎன்எக்ஸ் என்ஜின்: விபத்துக்குள்ளான ஏஐ171 விமானத்தில் ஜிஇஎன்எக்ஸ் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த என்ஜின்களை தயாரிக்கும் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏா் இந்தியா நிறுவனத்துக்கும் விமான விபத்து தொடா்பான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments