FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.

Updated On : 14 ஜூன் 2025, 2:11 am IST
பகிர்:

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெளி திட்ட ஒருங்கிணைப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுவதால் இந்தத் தாமதம் ஏற்படுகிறது’ என்று அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஃபல்கான் 9 ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் இவா்கள் பயணிக்க இருந்தனா். இந்தப் பயணம் கடந்த மே 29-ஆம் தேதி முதலில் திட்டமிடப்பட்டது. பின்னா் ஜூன் 8, ஜூன் 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் ஜூன் 10-ஆம் தேதி நிலவிய மோசமான வானிலை காரணமாக ஏவுகலன் ஏவுதல் இறுதியாக புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடைசிநேர சோதனைகளின்போது கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகலன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

வீரா்களின் பாதுகாப்புக்கு ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. வீரா்களின் பாதுகாப்பு, திட்ட ஒருங்கிணைப்புக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments