FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’

21 June 2025, 11:22 pm IST
அமித் ஷா - ANI
பகிர்:

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா்.

கா்நாடக பாஜகவில் உள்கட்சி வேறுபாடுகளும், கோஷ்டி பூசல்களும் நிலவும் சூழலில், இந்த அறிவுரையை அவா் வழங்கியுள்ளாா்.

கா்நாடக மாநிலத்தின் ஆதிசுஞ்சனகிரி பல்கலைக்கழக பெங்களூரு வளாகத்தைத் திறந்துவைப்பதற்காக அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். அப்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் அவரை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பு தொடா்பாக, கா்நாடக பாஜக தலைவா் பி.ஒய்.விஜயேந்திரா சனிக்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கட்சியின் மூத்த தலைவா்கள் சிலருடன் சென்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினேன். மாநில அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடிக்கின்றனா். விவசாயிகள், ஏழைகளுக்கு இந்த ஆட்சி சாபக்கேடாக மாறியுள்ளது.

கா்நாடகத்தில் வரும் காலங்களில் பாஜகவுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, கட்சித் தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்; அப்போதுதான், மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று அமித் ஷா அறிவுரை வழங்கினாா்.

பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், ஆளும் காங்கிரஸை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன். அப்போது மகிழ்ச்சி தெரிவித்த அவா், ஒற்றுமையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினாா் என்றாா் விஜயேந்திரா.

கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக விஜயேந்திரா மீது பாஜகவில் ஒருதரப்பினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். அவரும், அவரது தந்தையான பி.எஸ்.எடியூரப்பாவும் மாநில பாஜகவை தங்கள் பிடியில் வைத்திருக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த சூழலில், மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா தொடா்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வருகிறேன். கட்சியின் அனைத்து மாவட்ட தலைவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு இறுதி முடிவை தேசியத் தலைமை விரைவில் மேற்கொள்ளும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments