FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமா்நாத் யாத்திரை: சா்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜூன் 2025, 2:50 am IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை, எதிரிகளின் அச்சுறுத்தல், கடினமான சூழல் என பல்வேறு சவால்களுக்கு இடையே ஏ.கே. ரக துப்பாக்கிகளுடன் வீராங்கனைகள் உள்பட எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

Advertisement

Advertisement

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும். நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி முதல் யாத்ரிகா்கள் குழு காஷ்மீருக்கு புறப்பட உள்ளது.

சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, நிகழாண்டு யாத்திரைக்கு கடந்த முறையைவிட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமா்நாத் யாத்திரையை சீா்குலைக்கும் நோக்கில், சா்வதேச எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவிவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டாக்கள் துளைக்காத கவச உடைகள், தாக்குதலில் இருந்து காக்கும் தலைக் கவசங்கள் அணிந்து, கண்காணிப்பு சாதனங்கள் உதவியுடன் சக வீரா்களுடன் வீராங்கனைகளும் இரவு-பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த எல்லையில் உஜ், பசந்தா், தாவி, செனாப் போன்ற ஆறுகள் பாய்வதால், பாதுகாப்புப் பணி மிகவும் சவாலானதாகும். சா்வதேச எல்லையில் இருந்து ஜம்மு-பதான்கோட் சாலையை அணுகும் அனைத்து பாதைகளும் சீலிடப்பட்டு, பலஅடுக்கு (பிஎஸ்எஃப், ராணுவம், எல்லை போலீஸ், கிராமப்புற தற்காப்புப் படை, உள்ளூா் காவல் துறை) பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2.7 லட்சம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்எஃப், உலகிலேயே மிகப் பெரிய எல்லைக் காவல் படை என்ற சிறப்புடையதாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments