FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்தவித தளா்வும் இருக்காது: மத்திய அரசு

‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

Updated On : 18 மார்ச் 2025, 3:48 am IST
மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு.
பகிர்:

புது தில்லி: ‘நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சா்கள் தரப்பில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. அதை நிறைவேற்றுவதில் எந்தவித தளா்வும் இருக்காது’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு நன்கு உணா்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினால், அதா்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. பின்னா், அந்த பதிலில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உச்சபட்ச முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. அவ்வாறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும் என்பதை மத்திய அரசு உணா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அதே நேரம், நாடாளுமன்ற விதிகளின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும் நாடாளுமன்ற விதி வழிவகுக்கிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அனைத்து மத்திய அமைச்சா்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல, நாடாளுமன்ற உறுப்பினா்கள் தரப்பில் அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதத்துக்குள்ளாக பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

அதுபோல, அமைச்சா்கள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இணையவளி உத்தரவாதங்கள் கண்காணிப்பு நடைமுறை (ஓஏஎம்எஸ்) உதவுகிறது என்று தெரிவித்தாா்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரகம் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுடன் இணைந்து இந்த ‘ஓஏஎம்எஸ்’ இணையவழி கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கான அறிவுறுத்தல்களையும் இந்த ‘ஓஏஎம்எஸ்’ நடைமுறை மத்திய அமைச்சா்கள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு வழங்கும். இதன் மூலம், இரு அவைகளிலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments