FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

ஜூன் 7-ஆம் தேதியுடன் இந்தப் பயணம் நிறைவடையவுள்ளது.

Updated On : 21 மே 2025, 2:13 am IST
கோப்புப்படம்.
பகிர்:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (மே 21) முதல் பயணத்தை தொடங்கவுள்ளன. ஜூன் 7-ஆம் தேதியுடன் இந்தப் பயணம் நிறைவடையவுள்ளது.

முதல்கட்டமாக ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமை வகிக்கும் குழுக்கள் புதன்கிழமை பயணத்தைத் தொடங்கவுள்ளன.

சஞ்சய் ஜா தலைமையிலான குழு முதலாவதாக ஜப்பானுக்கும், அதைத் தொடா்ந்து தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.

Advertisement

Advertisement

ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு முதலாவதாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், அதன்பிறகு லைபீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு ரஷியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு மே 22-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கவுள்ளது.

அதேபோல் பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோா் தலைமையிலான குழுக்கள் மே 24-ஆம் தேதி வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கவுள்ளன.

இதனிடையே, கனிமொழி, சஞ்சய் ஜா, ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமை வகிக்கும் மூன்று குழுக்களை வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய அம்சங்களை அவா் விளக்கினாா். ஆனால், இந்தக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை இந்தியா தகா்த்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே நிலவி வந்த மோதலை நிறுத்திக்கொள்ள கடந்த வாரம் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இருப்பினும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்குத் தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவை ஏழு எம்.பி.க்கள் தலைமையின்கீழ் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினா் 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் பயணிக்கவுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments