100 நாள்களை இன்று நிறைவு செய்கிறது டி.கே.சிவகுமாா் தலைமையிலான காங்கிரஸ் அரசு
கா்நாடகத்தில் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு, வியாழக்கிழமையுடன் 100 நாள்கள் ஆட்சிகாலத்தை நிறைவு செய்கிறது.
கா்நாடகத்தில் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு, வியாழக்கிழமையுடன் 100 நாள்கள் ஆட்சிகாலத்தை நிறைவு செய்கிறது.
2023ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றதும் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி, சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதன்அடிப்படையில், இரண்டரை ஆண்டுகால ஆட்சிக்கு பிறகு முதல்வா் பதவியை சித்தராமையா மே 28 ஆம் தேதி ராஜிநாமா செய்திருந்தாா். அதன்பிறகு, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜூன் 3ஆம் தேதி டி.கே. சிவகுமாா் தலைமையில் புதிய காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த அரசு, வியாழக்கிழமையுடன் 100 நாள்கள் ஆட்சிகாலத்தை நிறைவுசெய்கிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் ‘வலுவான கா்நாடகத்துக்கான உறுதிமொழி - நூற்றாண்டுப் பயணம், முன்னேற்றத்தின் தோ்’ என்ற திட்டத்தை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் முன்னாள் முதல்வா் சித்தராமையா தொடக்கிவைக்கிறாா்.
இந்த விழாவில் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா், மாநில அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை, சட்டமேலவை உறுப்பினா்கள், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு செயல்படுத்திவரும் அன்னபாக்கியா, கிருஹலட்சுமி, சக்தி, யுவநிதி, கிருஹஜோதி ஆகிய 5 வாக்குறுதி திட்டங்களின் பயனாளிகளும் விழாவில் பங்கேற்கின்றனா். அவா்களுடன் முதல்வா் டி.கே.சிவகுமாா் கலந்துரையாடி, திட்டத்தின் விளைவுகளை ஆராயவிருக்கிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.