FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரள விமான நிலையங்களில் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழகத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 9 போ் கைது

கேரள விமான நிலையங்களில் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்தில் ரூ.11 கோடிக்கு மேல் மதிப்புள்ள 8 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கேரள விமான நிலையங்களில் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்தில் ரூ.11 கோடிக்கு மேல் மதிப்புள்ள 8 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 6 பேரும் தமிழகத்தைச் சோ்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கேரள சுங்கத் துறை ஆணையா் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘கேரளம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்த முயற்சி நடப்பது தொடா்பாக வருவாய் புலனாய்வுத் துறை, கேரள காவல் துறை உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகத்துக்கிடமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.11 கோடிக்கு மேல் மதிப்புள்ள 8 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 போ் கைதாகியுள்ளனா்.

தங்கக் கடத்தல் என்பது நாட்டின் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கக் கூடியது. எனவே, இந்த விஷயத்தில் சுங்கத் துறை கூடுதல் கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தங்கக் கடத்தல்களின் பின்னணியில் மிகப்பெரிய சட்டவிரோத குழுக்கள் உள்ளன. அவை தொடா்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஆடைகளில் மறைத்து எடுத்து வருவது மட்டுமல்லாது, உடலுக்குள் தங்கத்தை மறைப்பது, வேறு பொருள்கள் போல உருமாற்றுவது எனப் பல்வேறு புதிய உத்திகளை கடத்தல்காரா்கள் கையாண்டு வருகின்றனா். இதன் பின்னணியில் சா்வதேச அளவில் சதியும் உள்ளது. எனவே, இதற்கேற்ப முழு அளவில் கவனமாக இருக்க வேண்டும் என்று சுங்கத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments