முகநூலில் பிரதமர் மோடி விடியோ நீக்கப்பட்டதற்கு மன்னிப்பு கோரியது மெட்டா!
முகநூலில் பிரதமர் மோடியின் விடியோ நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது குறித்து...
முகநூல் பக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் விடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகார அதிகாரி ஜோயல் கப்லான் மன்னிப்பு கோரினார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தனது குழுவுடன் நேரில் சந்தித்த ஜோயல் கப்லான், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 23 அன்று பொதுமக்களிடம் நேரடியாக உரையாற்றும் வகையிலான ஒரு விடியோவை பகிர்ந்திருந்தார். மெட்டா நிறுவனத்தின் தகவலின்படி, அந்த விடியோ முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களிலிருந்து சிறிது நேரம் நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பதிவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அந்த விடியோ நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட மெட்டா நிறுவனம், தவறுதலாகவே அது நீக்கப்பட்டதாகவும், பின்னர் தனது தளங்களில் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தது.
எனினும் மெட்டா நிறுவனத்தின் விளக்கம் போதுமானதாக இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
பிரதமர் மோடியின் விடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நேரில் சந்திக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய விவகார அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர் தில்லியில் இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது பிரதமர் மோடியின் விடியோ நீக்கப்பட்டது தொழில்நுட்பக் கோளாறால் தற்செயலாக நிகழ்ந்தது என்றும், அதில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்தார். பின்னர் பிரதமரின் விடியோ நீக்கப்பட்டதற்கு அமைச்சரிடம் மன்னிப்பும் கோரினார். இதன் பிறகு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
எனினும், அரசியல் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட விடியோக்களுக்கு முகநூலின் அல்காரிதம் எப்படி பார்வையாளர்களைச் சென்றடைகிறது என்பது குறித்து அறிவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
error restricting PM Modis post apologised to minister on behalf of Meta Joel Kaplan, Chief Global Affairs Officer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.