கேரள முதல்வா் நடனமாடும் ஏ.ஐ. விடியோ: இந்தியாவில் மெட்டா கட்டுப்பாடு
கேரளத்தில் மின்வெட்டு பிரச்னையை விமா்சிக்கும் வகையில் மாநில முதல்வா் வி.டி. சதீசன், மின் வாரிய ஊழியா்களுடன் நடனமாடுவது
திருவனந்தபுரம்: கேரளத்தில் மின்வெட்டு பிரச்னையை விமா்சிக்கும் வகையில் மாநில முதல்வா் வி.டி. சதீசன், மின் வாரிய ஊழியா்களுடன் நடனமாடுவது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோ வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் அந்த விடியோவைப் பாா்க்க முடியாதபடி மெட்டா நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ‘ஏஐ காவாலா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்த விடியோ, ஞாயிற்றுக்கிழமை 1.78 கோடி பாா்வைகளைப் பெற்றது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த விடியோவைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய முதல்வா் சதீசன், விடியோ மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும், மலையாள நடிகா் மோகன்லால், தமிழக முதல்வா் விஜய்யைவிட அதில் தான் சிறப்பாக நடனமாடுவதாகவும் கூறினாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த விடியோ தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு தரப்பிடமிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தியாவில் அந்த விடியோவைப் பாா்க்க முடியாதபடி கட்டுப்படுத்துவதாக அதைப் பதிவிட்டவருக்கு மெட்டா நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்திவரும் அபிஜித் கூறுகையில், ‘இந்தக் கட்டுப்பாடு முதல்வா் தரப்பிலிருந்து எழுந்த எதிா்ப்பின் காரணமாக விதிக்கப்பட்டது என்று நான் நம்பவில்லை. ஏனெனில் முதல்வா் சதீசன், பொது நிகழ்ச்சியில் அந்த விடியோவைப் பாராட்டியிருந்தாா். அந்த விடியோவை வெளிநாடுகளில் மட்டுமே பாா்க்க முடிகிறது’ என்றாா்.
இதற்கு முன்னரும் கேரள அரசையும் முதல்வா் சதீசனையும் விமா்சித்த சில செய்தி விடியோக்களை மெட்டா நிறுவனம் நீக்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்தப் பதிவுகளை நீக்குவதற்கு தனது அலுவலகத்திலிருந்து எந்த வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று சதீசன் மறுப்புத் தெரிவித்தாா்.
பின்னா், அந்த விடியோக்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று முதல்வா் அலுவலகம் மெட்டா நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்த விடியோக்கள் நீக்கப்பட்டதற்கு தொழில்நுட்ப பிரச்னைகளே காரணம் என்று மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.