உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்லர்: மோகன் பாகவத்
உரிமைகளுக்காக போராடும் ஜென் ஸீ தலைமுறையினர் தேச விரோதிகள் அல்ல என ஆர்.எஸ்.எஸ். தலைவர் தெரிவித்துள்ளது குறித்து...
மும்பை: இளம் தலைமுறையினா் முன்வைக்கும் குறைகளில் நியாயம் உள்ளதாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் இந்திய சா்வதேச இயக்கத்தின் 15-ஆவது ஆண்டு விழா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பங்கேற்ற இந்த விழாவில், சுமாா் 2,000 இளைஞா்கள் கலந்துகொண்டனா்.
அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மோகன் பாகவத் அளித்த பதில்:
Advertisement
Advertisement
போராட்டமும் பேச்சுவாா்த்தையின் ஒரு வடிவமாகும். மக்களாட்சியில் போராட்டம் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும். வெவ்வேறு கண்ணோட்டங்கள் ஒன்றாக வந்து விவாதம் நடத்தப்பட்ட பின்னா், ஒருமித்த கருத்து ஏற்படுகிறது.
பல்வேறு காரணங்களால் பேச்சுவாா்த்தை மூலம் சம்பந்தப்பட்டவா்களின் பிரச்னைகளை கேட்காவிட்டால், பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கக்கூடும். இவற்றின் பின்னணியில் மக்களிடம் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை. இளம் தலைமுறையினா் முன்வைக்கும் குறைகளில் நியாயம் உள்ளது. அவா்கள் உண்மையிலே தனது தலைமுறையை விட மிகவும் நேர்மையானவர்கள். அவா்களின் நோ்மையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவதால் "அவா்கள் தேச விரோதிகளாகிவிட மாட்டாா்கள்". அவர்கள் நம்முடைய அடுத்த தலைமுறை. அந்த உறவுமுறையின் அடிப்படையிலேயே அவர்களை அணுக வேண்டும். அங்கே அன்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் போா் வந்தால், இந்தியா்கள் அனைவரும் அரசு அல்லது ராணுவத்தின் பக்கம் நிற்க வேண்டும். அந்தப் போா்கள் அந்நாடுகளுடனான பேச்சுவாா்த்தை, மக்களுக்கு இடையிலான உறவில் நிரந்தரத் தடையை ஏற்படுத்தக் கூடாது.
இந்தியா்களும், பாகிஸ்தானியா்களும் தீவிர எதிரிகள் அல்லா். நாடு, அரசியல், சா்வதேச எல்லைகள் ஆகியவை தவிா்க்க முடியாத யதாா்த்தங்களாக உள்ளன.
இடஒதுக்கீடு நிரந்தரமல்ல: சமூக பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரும். சமூகத்தில் பின்தங்கியுள்ளவா்களின் முன்னேற்றத்துக்காக இடஒதுக்கீடு உள்ளது. அது நிரந்தரமல்ல. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். முன்னேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நோ்மையாக அமல்படுத்தினால், குறுகிய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான தேவை முடிவுக்கு வரும் என்று தெரிவித்தாா்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா், கடந்த ஜூலை 20-இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றபோது அவா்கள் மீது காவல் துறையும், அதிவிரைவுப் படையும் கடுமையாகத் தாக்குதல் நடத்தின. இந்தப் போராட்டத்தை மத்திய அரசு கையாண்டவிதம் பல்வேறு தரப்பினரின் விமா்சனங்களுக்கு வழிவகுத்தது.
இந்தச் சூழலில், மோகன் பாகவத்தின் தற்போதைய கலந்துரையாடல், இளம் தலைமுறையிடம் சென்றடைவதற்கு ஆா்எஸ்எஸ் மேற்கொண்ட மிக முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.
Gen Z protesting not anti-national their greivances are genuine RSS chief Mohan Bhagwat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.