13-வது நாளாக நீடிக்கும் ஜார்க்கண்ட் போராட்டம்: பேரவையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக..
ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக, சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூலை 25 முதல் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம், சமீப காலங்களில் மாநிலத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
14-வது ஜார்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆட்சேர்ப்புத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, எதிர்க்கட்சியான என்டிஏ கூட்டணியின் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினர்.
மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினர்களில், பாஜகவின் தலைமை கொறடா நவீன் ஜெய்ஸ்வால், ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு "விற்பனை" செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில், இரண்டு பெண்கள் உள்பட ஐந்து பேர் இணைந்துள்ளனர்.
கடந்த ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மஹ்தோவின் ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்த அளவுகள் கணிசமாகக் குறைந்ததால் அவரது உடல்நிலை கவலைக்குரியதாக மாறியது.
நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தில்லியில் 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மஹ்தோவிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் தண்ணீரையாவது அருந்துமாறு வலியுறுத்தினார். வாங்சுக்கின் வேண்டுகோளை ஏற்று, மஹ்தோ தண்ணீர் அருந்தினார்.
அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால், தாங்கள் இத்தகைய தீவிரமான போராட்டத்தைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
The protest against alleged examination irregularities in Jharkhand intensified on Thursday with opposition MLAs protesting on Assembly premises on the first day of its Monsoon Session, as the stir gained steam over the past 13 days with six demonstrators on hunger strike.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.