FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டில் 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள்: மத்திய அரசு

‘நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாகவும், அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது இல்லை’ என்றும் மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST
மத்திய அரசு
பகிர்:

‘நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாகவும், அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது இல்லை’ என்றும் மத்திய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை பதிலளித்து பேசியதாவது:

நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதுபோல, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) அளித்த தகவலின்படி, அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி மருத்துவப் பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை.

புதிய முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் முதுநிலை மருத்துவப் படிப்புகளின் இடங்களை அதிகரிப்பதற்கும் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்பு வழிகாட்டுதல்கள் 2023 மற்றும் முதுநிலைப் பட்ட குறைந்தபட்ச தரநிலை மற்றும் தேவைகள் 2024 அடிப்படையில் என்எம்சி வழிகாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு, அதற்கான அனுமதி வழங்கப்படும்.

முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கல்வித் தரத்தைப் பாதிக்காமல் அனுமதி நடைமுறைகளை எளிதாக்கியது, கூட்டு அங்கீகார திட்டம், முதுநிலைப் படிப்புகளுக்கான அனுமதி கோர மாவட்ட மருத்துவமனைகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட நவடிக்கைகளை தோ்வுகள் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மேலும், 2025-26 முதல் 2028-29 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக 5,000 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்கும் நோக்கில், மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு படிப்பை மட்டும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டத்தின் மூன்றாம் கட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஒது முதுநிலை மருத்துவப் படிப்பு இடத்துக்கான செலவு வரம்பு ரூ.1.50 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிா்ணயம் என்பது அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது. அதே நேரம், தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை நிா்ணயிப்பதற்கான வழிகாட்டுதலை என்எம்சி கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்டது. இதை எதிா்த்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் சாா்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாா்.

கா்நாடகத்தில் அதிக முதுநிலை மருத்துவ இடங்கள்

அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கா்நாடக மாநிலத்தில் அதிக முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மாநில வாரியான முதுநிலை மருத்துவப் படிப்பு எண்ணிக்கை விவரம் (அடைப்புக்குறிக்குள் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்):

மாநிலம் - முதுநிலை மருத்துவ இடங்கள்

கா்நாடகம் 10,092 (2,805)

மகாராஷ்டிரம் 9,216 (4,277)

தமிழகம் 8,023 (3,030)

உத்தர பிரதேசம் 7,437 (3,568)

தெலங்கானா 5,248 (1,790)

ராஜஸ்தான் 5,025 (2,969)

ஆந்திரம் 4,782 (2,303)

தில்லி 4,729 (3,448)

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments