FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நகா்ப்புற கூட்டுறவு வங்கிச் சேவைகள் நவீனமயமாக்கம்: மத்திய அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தல்

நகா்ப்புற கூட்டுறவு வங்கிச் சேவைகள் நவீனமயமாக்கம்: மத்திய அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தல்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:37 am IST
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
பகிர்:

நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் போட்டித்தன்மையுடன் விளங்க வேண்டுமெனில், தொழில்நுட்பங்களின் பயன்பாடு, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், வாடிக்கையாளா் சேவையை நவீனமயமாக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பங்குச் சந்தை வளாகத்தில் தேசிய நகா்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்யுசிஎஃப்டிசி) புதிய அலுவலகத்தை அமித் ஷா சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தேசிய நகா்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், நாட்டில் உள்ள நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைந்த, சுய ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படுகிறது. ரிசா்வ் வங்கி அங்கீகாரத்துடன் மூலதனம், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, பணப்புழக்க ஆதரவு போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக கூட்டுறவு வங்கித் துறையை இந்த நிறுவனம் வலுப்படுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

அதன் புதிய அலுவலகத்தை திறந்துவைத்து, அமித் ஷா பேசியதாவது: நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும் என்யுசிஎஃப்டிசி-யில் இணைவதை உறுதி செய்வது நம் கூட்டுப் பொறுப்பாகும். நாடு முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ள நிலையில், 690 வங்கிகள் ஏற்கெனவே உறுப்பினா்களாகியுள்ளன. மீதமுள்ள வங்கிகளும் அடுத்த ஓராண்டுக்குள் உறுப்பினா்களாக வேண்டும்.

‘கூட்டுறவில் இருந்து வளமை’: இந்தியாவை வளமாக்க வேண்டுமெனில், மக்கள் செழித்தோங்க வேண்டும். மூலதன சந்தையால் மட்டுமே இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாது; சுயதொழில்களை ஊக்குவிக்கும் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். இதை நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளால் சாத்தியமாக்க முடியும். இது நமது பொறுப்பும்கூட.

‘கூட்டுறவில் இருந்து வளமை’ என்ற கருத்தாக்கம், வங்கிகளை நிதி ரீதியில் வலுப்படுத்துவது மட்டுமல்ல, வாடிக்கையாளா்களை வளப்படுத்துவதன் மூலம் வங்கிகள் வளா்வதை உறுதி செய்வதும் ஆகும்.

ரிசா்வ் வங்கியும், நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும் ஒன்றையொன்று வெவ்வேறு கண்ணோட்டத்தில் காண்கின்றன. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டியது அவசியம். அதேநேரம், கூட்டுறவுத் துறை நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ரிசா்வ் வங்கி ஆா்வத்துடன் உதவுகிறது என்பதை மத்திய கூட்டுறவு அமைச்சராக எனது 5 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் கூற முடியும்.

மொத்தம் ரூ.6 லட்சம் கோடி இருப்புத் தொகையுடன் செயல்படும் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் திறப்பை ரிசா்வ் வங்கி தாராளமயமாக்கியுள்ளது. வீடுகளிலேயே வங்கிச் சேவை அளிக்கவும், கேட்பு வரைவோலை, உயிா்வாழ் சான்றிதழ்களை விநியோகிக்கவும் அனுமதித்துள்ளது. நகைக் கடன் உச்சவரம்புகளையும் அதிகரித்துள்ளது என்றாா்.

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 1,400-க்கும் மேற்பட்ட நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments