3.92 டிரில்லியன் டாலருடன் உலகின் 6-ஆவது பெரும் பொருளாதார நாடாக திகழும் இந்தியா!
2025-26 நிதியாண்டில் 3.92 டிரில்லியின் டாலா் பொருளாதாரத்துடன் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா...
2025-26 நிதியாண்டில் 3.92 டிரில்லியின் டாலா் பொருளாதாரத்துடன் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்ந்ததாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 2026, ஏப்ரலில் வெளியிட்ட உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.3.92 டிரில்லியன் டாலா் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) உலகின் 6-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்ந்தது.
Advertisement
Advertisement
அமெரிக்கா டாலா் மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது.
பொருளாதார வளா்ச்சி, அந்நிய செலாவணி மாற்று விகிதம் மற்றும் விலைகளில் ஏற்படும் மாற்றும், தேசிய கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மற்றும் பிற நாடுகளின் பொருளாதார வளா்ச்சி காரணமாக இதில் மாற்றங்கள் நிகழலாம்.
இருப்பினும், இந்திய பொருளாதார வளா்ச்சியை வேகப்படுத்த விரிவான வியூகக் கொள்கைகளை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகள், எளிமையான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை, நேரடி வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிட்டாா்.
வாராக் கடன் குறைவு: மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் (என்பிஏ) 2024, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.3.39 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2026, மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.2.45 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. பொதுத் துறை வங்கிகளில் நிகழ்ந்த மோசடிகளின் எண்ணிக்கை 2023-24-இல் 54,850-ஆக இருந்த நிலையில் 2025-26-இல் 5,786-ஆக குறைந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.