பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!
80 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்...
நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர நாள் வரும் சனிக்கிழமை (ஆக. 15) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் முர்மு வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உரையாற்றியுள்ளார்.
இதையடுத்து, நாட்டில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், காமன்வெல்த் போட்டிகளில் பெண்களே அதிகளவில் பதக்கங்களை வென்றுள்ளனர் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“நமது சுதந்திர நாளை முன்னிட்டு இந்தத் தேசியத் திருநாளில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் சில மணிநேரங்களில் நமது நாடு தனது சுதந்திரத்தின் 80 ஆவது ஆண்டின் தொடக்கத்தைக் காணவுள்ளது. நமது சுதந்திரத்தின் சின்னமான மூவர்ணக் கொடியைப் பெருமிதத்துடன் ஏற்றிவைப்போம்.
இல்லாமையின் காரணமாக எந்தவொரு நபருக்கும் நீதி மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நீதித்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.
பொதுத் தேர்வுகள் நம் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளின் நுழைவு வாயிலாக அமைகின்றன. இந்தத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுத்து, தேர்வுகளை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதே இந்தச் சீர்த்திருத்தங்களின் நோக்கமாகும்.
சமீபத்தில், கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா வென்ற 13 தங்கப் பதக்கங்களில் 8 பதக்கங்களைப் பெண்கள் வென்றனர். நாட்டில் பெண்களின் பொருளதாரச் சுயசார்பு அதிகாரித்து வருகிறது.
பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் எங்குச் சென்று ஒளிந்தாலும் அதற்கான விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான இந்திய ஆயுதப்படைகளின் துல்லியமான தாக்குதல் திறனை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.
தேசிய நலன் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் ஒரு நாட்டுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்பட்டது ஒரு தீர்க்கமான நடவடிக்கை.” என அவர் தெரிவித்துள்ளார்.
President Droupadi Murmu has extended her greetings to the people on the occasion of the country's 80th Independence Day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.