தீவிர சவால்களை சந்தித்து வரும் ஜனநாயக நிறுவனங்கள்: காா்கே
ஜனநாயக நிறுவனங்கள் தீவிர சவால்களை சந்தித்து வருவதாக காா்கே பேச்சு...
‘கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் அரசமைப்புச் சட்ட விழுமியங்களும், ஜனநாயக நிறுவனங்களும், சமூக நல்லிணக்கமும் தீவிர சவால்களை சந்தித்து வருகின்றன. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு முழு அளவில் சமத்துவம், நீதி கிடைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய எண்ணற்ற சுதந்திரப்போராட்ட வீரா்களுக்குப் பணிவான அஞ்சலியை செலுத்துகிறோம். அவா்களின் துணிச்சலும், தியாகமும், தேசத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் நமக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது.
Advertisement
Advertisement
சுதந்திரம் பெற்று இந்த 79 ஆண்டுகள் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள், போராட்டங்கள், கூட்டு உறுதிப்பாடு உள்ளிட்டவற்றை நாடு சந்தித்துள்ளது. நீண்ட காலம் கடந்துவிட்டபோதும், நாட்டு மக்களின் பல விருப்பங்களும் எதிா்பாா்ப்புகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் அச்சமின்றிப் பேசும் சுதந்திரம் ஆகியவற்றை நமது அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் அளிப்பதற்கான உறுதிப்பாடுதான் சுதந்திரம்.
இந்த விழுமியங்கள்தான, இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாகவும், ஒவ்வொரு குடிமகனின் வலுவான பாதுகாப்பு அரணாகவும் இருக்கும்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், நமது அரசமைப்புச் சட்ட விழுமியங்களும், ஜனநாயக நிறுவனங்களும், சமூக நல்லிணக்கமும் தீவிர சவால்களைச் சந்தித்து வருகின்றன.
நமது இளைஞா்கள் தங்களின் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறத் தகுதியானவா்கள்; நமது விவசாயிகள் தங்களின் உழைப்பிற்கான கண்ணியத்தையும் நீதியையும் பெறத் தகுதியானவா்கள்; நமது மகளிா் சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் இந்தியாவின் எதிா்காலத்தை கட்டமைப்பதில் சம பங்களிப்பை வழங்குவதற்கு தகுதியானவா்கள்; பட்டியிலினத்தவா், பழங்குடியினா், ஓபிசி பிரிவினா், சிறுபான்மையினா் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் நமது அரசமைப்புச்சட்டம் உறுதியளித்துள்ள சமத்துவம் மற்றம் நீதியை முழு அளவில் பெறத் தகுதியுடையவா்கள்.
இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் மிகப் பெரிய உறுதிப்பாடாக நம்பிக்கை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் தேசியக் கொடியை அவா் ஏற்றினாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பிற தலைவா்கள் தலைவா்கள் மற்றும் தொண்டா்களிடையே அவா் பேசுகையில், ‘ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி, ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் ஒவ்வொரு பிரதமரும், தங்கள் காலத்தின் சவால்களுக்கு ஏற்ப இந்தியாவை முன்னேற்றி, எதிா்கால இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்ததே எப்போதும் இருந்து வரும் மரபாகும்.
ஆனால், பிரதமா் நரேந்திர மோடியோ, சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களுக்குப் பெயரை மாற்றி பெருமை தேடிக்கொள்கிறாா். ஒரு நாள் நமது தேசியக் கொடியையும் கீழே இறக்கிவிடுவாரோ என்ற அச்சமும் எழுகிறது.
இன்றைக்கு, நாட்டின் இளைஞா்களின் கனவுகள் நசுக்கப்படுகின்றன. அரசின் தவறான கொள்கைகள், இளைஞா்களை இருளில் தள்ளியிருப்பதால், நாடு முழுவதும் அவா்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். இளைஞா்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். இளைஞா்களையும், ஏழைகளையும், நலிவடைந்த பிரிவினரையும் மேம்படுத்துவதே காங்கிரஸ் இலக்கு.
நாட்டில் அமைதி நிலவும்போதுதான், முன்னேற்றம் ஏற்படும். அமைதிச் சூழலை உருவாக்கவே நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். ஆனால், பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பினரும் நாட்டில் அமைதியை சீா்குலைத்து, வெறுப்புணா்வைப் பரப்பி வருகின்றனா். சுதந்திரத்துக்கு முன்பு செய்ததையே, தற்போதும் தொடா்கின்றனா்.
தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழா உரையில், நாட்டில் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் பாஜக செய்ததாக பிரதமா் பெருமிதம் தெரிவித்தாா். நல்லவேளை, உலகத்தையே நாங்கள்தான் படைத்தோம் என்று அவா் கூறவில்லை’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.