சர்க்கரை விலை உயர்வு ஏன்? கேள்விகளை அடுக்கிய கார்கே!
சர்க்கரை விலை உயர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து...
சர்க்கரை விலை உயர்வு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுக்கடுக்கான கேள்விகளை சனிக்கிழமை (அக. 22) எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் சர்க்கரையின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, சில மாதங்களாக விலை உயர்ந்து காணப்படுகிறது. சர்க்கரையின் இந்த விலை உயர்வுக்குக் காரணம், பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தக் கருத்தை நிராகரித்த மத்திய அரசு, தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு எதிர்பாா்த்ததைவிட குறைவான உற்பத்தி, பண்டிகை காலத்தையொட்டி தேவை அதிகரிப்பு, காலநிலை சார்ந்த பயிர்ச்சேதங்கள், உலகளாவிய விநியோகக் கட்டுப்பாடுகள், சில இடங்களில் காணப்படும் பதுக்கல் உள்ளிட்டவையே காரணம் என திட்டவட்டமாகத் தெரிவித்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பண்டிகை காலத்துக்கு முன்பாகவே, மோடி அரசின் கசப்பான கொள்கை இனிப்பான சர்க்கரையில் ஊடுருவியுள்ளது. மோடி அரசை நோக்கி மூன்று நேரடியான கேள்விகளை எழுப்புகிறேன்.
1. உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான இந்தியாவில், சர்க்கரை இருப்பு கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலை ஏன் வந்துள்ளது? ஏற்றுமதியை நிறுத்திவிட்டு, 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்யும் நிலைக்கு நாம் எப்படி வந்தோம்?
2. கடந்த 3 மாதங்களில் சர்க்கரை 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. பண்டிகைகளூக்கு முன்பாக, மக்கள் மீது சுமத்தப்பட்ட இந்த சுமைக்கு யார் பொறுப்பு?
3. நாட்டில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும்போது, அதனை வெளிநாட்டிலிருந்து அரசு இறக்குமதி செய்கிறது. எத்தனாலை உற்பத்தி செய்வதற்காக, கரும்பு மற்றும் தானியங்களைத் திசைதிருப்பும் கொள்கை ஏன் மறுபரிசீலனை செய்யப்படவில்லை? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் சா்க்கரை விலை ஒரு கிலோ ரூ. 48 லிருந்து ரூ. 67 ஆக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Senior Congress leader Mallikarjun Kharge raised a series of questions on Saturday (Oct. 22) regarding the rise in sugar prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.