FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லையா? ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது கவனம்!

நீரிழிவு பிரச்னை தொடர்பான கேள்விகளுக்கு மருத்துவரின் பதில்கள்...

Updated On : 28 ஜூலை 2026, 1:10 pm IST
கோப்புப் படம் - IANS
பகிர்:

- அன்னா ஜோஸ்

நீண்டகாலமாக நீரிழிவு கட்டுப்பாடின்றி இருந்து பின்னர், ரத்தச் சர்க்கரை அளவை திடீரெனக் குறைப்பது 'ரெட்டினோபதி' (retinopathy) பாதிப்பை மோசமாக்கக் கூடும் என்பதால் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேரளத்தைச் சேர்ந்த நீரிழிவு ஆய்வாளரும் மருத்துவருமான டாக்டர் ஜோதிதேவ் கேசவ்தேவ் கூறுகிறார்.

நீரிழிவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் மருத்துவர் அளித்த பதில்களும்...

Advertisement

Advertisement

பார்வை இழப்புக்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாக மாறி வருகிறது. இது எந்த அளவுக்கு தீவிரமானது?

நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருவதால் பார்வை இழப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது, ​​நீரிழிவால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் ('டயாபெட்டிக் ரெட்டினோபதி) சுமார் 30 லட்சம் பேர் பார்வை இழக்கும் ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பார்வை இழப்புக்கான காரணங்களில் 'டயாபெட்டிக் ரெட்டினோபதி' ஆறாவது இடத்தில் உள்ளது. முன்பு இது 17-வது இடத்தில் இருந்தது, கட்டுப்பாடற்ற நீரிழிவுதான் இதற்கு காரணம்.

நீரிழிவால் கண்களைப் பாதிக்கக் கூடிய 3 நோய்கள் வரலாம். ரெட்டினோபதி, குளுக்கோமா (கண் அழுத்த நோய்) மற்றும் கண்புரை (cataracts). வயது முதிர்வின்போது கண்புரை ஏற்படுகிறது. ஆனால், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால் கண்புரை மிக ஆரம்ப நிலையிலேயே ஏற்படும். இந்தியாவில் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5ல் ஒருவருக்கு 'டயாபெட்டிக் ரெட்டினோபதி'யின் அறிகுறிகள் உள்ளன.

நீரிழிவு நோய் எவ்வாறு விழித்திரையைப் பாதிக்கிறது மற்றும் பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது?

குளுக்கோஸ் அளவு அதிகரிப்பு அல்லது ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்போது, ​​அதை 'குளுக்கோஸ் மாறுபாடு' என்று அழைக்கிறோம். இது அட்வான்ஸ்டு கிளைகேஷன் (advanced glycation), ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் (oxidative stress), எண்டோதீலியல் பாதிப்பு (endothelial damage) ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இதனால் விழித்திரையில் உள்ள சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு ரத்தக் கசிவு (புள்ளிகள் மற்றும் திட்டுக்கள் வடிவில்) மற்றும் கொழுப்புப் படிவுகள் ஏற்படுகின்றன. இவை விழித்திரையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. அவற்றை 'ஃபண்டோஸ்கோபி' (fundoscopy) அல்லது விழித்திரை கேமரா மூலம் காண முடியும். விழித்திரையின் மிக ஆரம்ப நிலை மாற்றங்களை, பாதிப்புகளைக் கண்டறிய இவை உதவுகின்றன. ரெட்டினோபதி ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் பார்வையைத் தக்கவைக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள் எப்போது விழித்திரை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

ஒருவருக்கு டைப்-2 நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக விழித்திரையைப் பரிசோதிக்க வேண்டும். நீரிழிவு, கண்ணைப் பாதிக்க பல ஆண்டுகள் ஆனாலும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கக்கூடும். எனவே, நீரிழிவு பெரும்பாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகே கண்டறியப்படுகிறது. அதற்குள், விழித்திரை நோய் (ரெட்டினோபதி) ஏற்பட்டிருக்கலாம். நீரிழிவு கண்டறியப்படும்போதே, 10% க்கும் மேற்பட்டவர்களுக்கு விழித்திரை நோயின் அறிகுறிகள் காணப்படுகிறது. குழந்தைகளையும், அரிதாக பெரியவர்கள் மற்றும் வயதானவர்களையும் பாதிக்கும் டைப்-1 நீரிழிவு கண்டறியப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோய் உள்ள ஒருவர் கர்ப்பத்திற்கு திட்டமிட்டால், திட்டமிடுவதற்கு முன்பும் முதல் கர்ப்ப கால மூன்று மாதங்களிலும் விழித்திரையைப் பரிசோதிக்க வேண்டும், ஏனெனில் கர்ப்ப காலத்தில் விழித்திரை நோய் மோசமடையக் கூடும்.

ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு எந்தளவுக்கு பங்கு வகிக்கிறது? மேலும் குளுக்கோஸ் அளவை திடீரெனக் குறைப்பது விழித்திரை நோயை மோசமாக்குமா?

ஒருவருக்கு விழித்திரை நோய் அல்லது மாகுலர் எடிமா (macular edema) பாதிப்பு இருக்கும்போது, நீண்ட காலமாகக் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவுக்குப் பிறகு திடீரென குளுக்கோஸ் அளவு குறையும்போது விழித்திரை நோயை மோசமாக்கலாம். இன்சுலின் அல்லது வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் ஜிஎல்பி -1 (GLP-1) ஊசிகள் போன்ற மருந்துகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நீரிழிவு விழித்திரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், விழித்திரை வீக்கத்தை மோசமாக்கக் கூடிய பியோகிளிட்டசோன் போன்ற மருந்துகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

நீரிழிவு விழித்திரை நோய் தனித்து ஏற்படுகிறதா?

விழித்திரை நோய் தனியாக ஏற்படுவதில்லை. நுண் ரத்த நாளச் சிக்கல்களின் ஒரு பகுதியாகும். ஒருவரின் விழித்திரை பாதிக்கப்பட்டால், நரம்புகளும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படுவது மிகவும் இயல்பானது மற்றும் வழக்கமானது. வழக்கமான நீரிழிவு ஆலோசனையுடன், பாதப் பரிசோதனை, ஈசிஜி, உடல் அமைப்புப் பகுப்பாய்வு, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு, கொழுப்புகள், இதயம், சிஆர்பி அளவுகளைச் சரிபார்க்க ஆய்வகப் பரிசோதனைகளையும் பரிந்துரைக்கிறோம். மருத்துவர், செவிலியர், பயிற்றுநர்கள் மற்றும் உணவியல் நிபுணருடன் இணைந்து, நோயாளியின் குளுக்கோஸ் அளவை வரம்பிற்குள் வைத்திருக்கவும், அதற்கேற்றவாறு உணவை எடுத்துக்கொள்ளவும் உதவுவார்கள். ஏனெனில் ஒவ்வொரு உணவும் ஒவ்வொருவரிடையே வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Diabetes out of control, Be careful while bringing down blood sugar level

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments