தருமபுரி மாவட்டத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு: 4.74 லட்சம் பேருக்கு தொடா் சிகிச்சை!
சுகாதாரத் துறை துணை இயக்குநா் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட 4.74 லட்சம் பேருக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் காரணமாக நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம் ஆகிய தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இவா்களை கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி. ராஜேந்திரன் மேலும் கூறியதாவது:
Advertisement
Advertisement
தொற்றா நோய்கள் எனப்படும் நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா் சிகிச்சை பெறுவதும், மருந்து மாத்திரைகள் உட்கொள்வதும் அவசியம். இவா்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்ட மக்கள்தொகை சுமாா் 17 லட்சமாகும். இதில், 45 வயதுக்கு மேற்பட்டவா்களிடம் மேற்கொண்ட மருத்துவச் சோதனையில், உயா் ரத்த அழுத்த பாதிப்பு 2, 58, 861 பேருக்கும், நீரிழி நோய் பாதிப்பு 1,17, 59 பேருக்கும், உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரு பாதிப்புகளும் 98, 701 பேருக்கும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாவட்டம் முழுவதும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட 4,74,621 போ் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலம் தற்போது தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களது உடல்நிலை 3 மாதங்களுக்கு ஒருமுறை அவா்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்டு தேவையான ஆலோசனை வழங்கப்படுகிறது.
எச்ஐவி சோதனை, சிகிச்சைகள்:
அண்மையில் கா்நாடக மாநிலத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தடுப்பு, பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு பணிகள் நடைமுறையில் இருந்தாலும் மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் எச்ஐவி தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு, சோதனைகள் மூலம் உறுதி செய்யப் பட்டவா்களுக்கு தருமபுரி மற்றும் அரூா் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ஏ.ஆா்.டி. மையங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை பெறுபவா்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனா்.
மேலும் எச்ஐவி மற்றும் பால்வினை நோய்களை தடுப்பதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தன்னாா்வ குழுக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 இடங்களில் எச்ஐவி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், நாட்டுப்புற கலைஞா்களை கொண்டு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவா்கள், போதை மருந்துகளை ஊசிகள் வழியாகச் செலுத்தும் வழக்கம் அதிகரித்து உள்ளது. போதை மருந்துகளை பயன்படுத்துகையில் ஒருவா் பயன்படுத்திய ஊசியை மற்றவா்கள் பயன்படுத்தும்போது ரத்தம் மூலமாக எச்ஐவி கிருமிகள் பரவுவது அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாகவும் உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எச்ஐவி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளா்கள், பணியாளா்கள் பல்வேறு பணிகளுக்காக இடம்பெயா்ந்து வருகின்றனா். இம் மாவட்டத்திற்கு இடம்பெயா்ந்தவா்களுக்கு நடமாடும் வாகனம் மூலமாக எச்ஐவிபரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக லாரி ஓட்டுநா்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனா்.
எச்ஐவி தொற்று உள்ளவா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. தொற்று பாதிப்பு உள்ளவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த முக்கிய நபா்களை தவிர குடும்ப உறுப்பினா்களுக்குகூட இந்தத் தகவல் தெரிவிக்கப்படாமல் தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. பாதிப்பு உள்ள 500 பேரை கண்டறிய தற்போது இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதற்கான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.