FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து...

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் - பிரதிப் படம்
பகிர்:

கேரளத்தின் குருவாயூர் கோயிலில் இன்று (ஆக. 23) ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த நாள்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். இந்த நாள்களில் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

குருவாயூரில் இதுவரையில் இல்லாதவகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் திருமணப் பதிவுகள் குவிந்துள்ளதால், கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், திருமணங்களைத் தடையின்றி நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆவணி மாத முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமையில் (ஆக. 23) குருவாயூர் கோயிலில் 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து, குருவாயூர் தேவஸ்தானத்தின் தலைவர் ஏ.வி. கோபிநாத் கூறியதாவது, குருவாயூரில் இன்று 437 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. குருவாயூரின் வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெற்றன. மேலும், இதற்கு மிக முக்கியமான காரணி, குருவாயூரில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புதான்.

திருமணங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது. கோயிலில் கூட்டத்தை நிர்வகிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ வசதிக்காக அவசர ஊர்தி சேவையும், மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். ஒரு திருமணத்துக்கு என்ன வசதிகள் தேவைப்படுமோ, அவை அனைத்தையும் குருவாயூர் தேவஸ்தானம் செய்துள்ளது.

மலையாள மாதமான சிங்கத்தின் (Chingam) முதல் ஞாயிற்றுக்கிழமையில் குருவாயூரில் திருமணங்கள் நடத்தப்படுவது சிறப்பானதாக இருக்கும். கோயிலில் அதிகாலை 4.10 மணிக்குத் தொடங்கி, முதல் 2 மணிநேரத்திலேயே 137 திருமணங்கள் நடத்தப்பட்டன.

திருமணங்கள் நடத்தப்படுவதற்காக கோயில் முற்றத்தில் 6 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 மண்டபங்களில் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, மணமக்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையை 24-ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

summary

Guruvayur temple witnesses highest number of weddings on single day

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments